சுட்டெரிக்கும் கோடை வெயில் தாவரவியல் பூங்காவில் குறைந்த விலையில் பழரசம் விற்பனை

ஊட்டி: ஊட்டியில்  கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு குறைந்த விலையில், பல்வேறு பழரசங்களை விற்பனை செய்ய  துவங்கியுள்ளதால் அதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி அருந்துகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கும் தென்மேற்கு பருவமழை 2 மாதங்கள் பெய்யும். இரு மாதங்கள்  இடைவெளிக்குப்பின் மீண்டும் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை பெய்யும். வடகிழக்கு பருவமழை ஓய்ந்தவுடன் பனிப்பொழிவு துவங்கும்.

இது சுமார் 4 மாதங்கள் நீடிக்கும். பிப்ரவரி மாதம் இறுதி வரை பனிப்பொழிவு காணப்படும். இதனால், ஊட்டியில் கடும் குளிர் காணப்படும். மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை வெயில் காணப்படும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக காலநிலையில், மாற்றம்  ஏற்பட்டு டிசம்பர் மாதத்திற்கு மேல் இரவில் பனி பொழிவு காணப்பட்டாலும், பகல் நேரங்களில் கடும் வெயில் காணப்படுகிறது. தற்போது பனியின் தாக்கம் சற்று குறைந்து காணப்படும் நிலையில், பகல் நேரங்களில் வெயில் வாட்டத்  துவங்கியுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் வெயிலை சமாளிக்க ஐஸ் கிரீம், ஜூஸ் கடைகளை நாடிச் செல்ல ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் பூங்காவை சுற்றி பார்த்துவிட்டு வெயிலில் களைப்படைகின்றனர். இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் வெயிலில் களைப்படையாமல் இருக்க தற்போது பழரசங்களை பூங்கா நிர்வாகம் விற்பனை செய்து வருகிறது. குறைந்த விலையில் விற்பனை செய்வதால், இதனை சுற்றுலா பயணிகள் வாங்கி பருகி செல்கின்றனர். ரூ.10க்கு பல வகையான ஜூஸ் கிடைப்பதால், சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கி அருந்துகிறார்கள். இதன் மூலம் பூங்கா நிர்வாகத்திற்கு  வருவாயும் கிடைக்கிறது.

Related Stories: