பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா மார்ச் 7ம் தேதி தொடக்கம்: கோவில் வளாகத்தை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அம்மனை தரிசித்துச் செல்வது வழக்கம். ஆண்டுதோறும் பங்குனி மாதம் பண்ணாரி அம்மன் கோவிலில் நடைபெறும் குண்டம் திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். திருவிழாவில் சுமார் ஒன்றரை லட்சம் பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு திருவிழா ரத்து செய்யப்பட்டது. 2021-ம் ஆண்டு குண்டம் திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் கோயில் பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்கி மிகவும் எளிமையான முறையில் விழா நடைபெற்றது.

 இந்த நிலையில் இந்த ஆண்டு திருவிழா தேதி அட்டவணை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு திருவிழாவில் பக்தர்கள் தீ குண்டம் இறங்க அனுமதிக்கப்படுவார்களா? என்பது குறித்து ஈரோடு கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள  அறிவிப்பு அட்டவணையின்படி மார்ச் 7-ந் தேதி (திங்கட்கிழமை)  இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து மார்ச் 15ம் தேதி  இரவு கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சியும், மார்ச் 21ம் தேதி  இரவு மற்றும் மார்ச் 22ம் தேதி செவ்வாய் அதிகாலை குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறகிறது. மார்ச் 23ந் தேதி  இரவு புஷ்பரத ஊர்வலமும், 24ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 25ந் தேதி மாலை திருவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. மார்ச் 28ந் தேதி மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.

 இந்த ஆண்டு திருவிழாவில் பக்தர்கள் தீ குண்டம் இறங்க அனுமதிக்கப்படுவார்களா? இல்லையா? என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சார்பில் செய்யும் பணி நேற்று தொடங்கியுள்ளது.

முதற்கட்டமாக கோயில் வளாகத்தில் 10க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சுத்தப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது. இரண்டொரு நாட்களில் கலெக்டர் தலைமையில் திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெறும். கூட்டத்தில்  முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: