வார விடுமுறையையொட்டி ஏற்காடு, பூலாம்பட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: படகு சவாரி செய்து உற்சாகம்

ஏற்காடு: வார விடுமுறையையொட்டி ஏற்காடு, பூலாம்பட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் படகு சவாரி செய்து உற்சாகமடைந்தனர். சேலம் மாவட்டம் ஏற்காடு, ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு தினமும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். வாரவிடுமுறை தினமான இன்று (ஞாயிறு) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இதனால் அங்குள்ள தங்கும் விடுதிகள் நிரம்பி உள்ளன. ரவுண்டானா உள்பட பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களாக ஏற்காட்டில் மழை பெய்து, குளுமையான சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவர்கள் ஏரியில் குடும்பத்துடன் படகு சவாரி செய்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி மற்றும் மான் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் சாலையோர கடைகளில் விற்பனை அமோகமாக நடந்ததால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். லேடீஸ் மற்றும் ஜென்ட்ஸ் சீட் பகுதியில் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

ஏற்காட்டில் விரைவில் துவங்கவுள்ள கோடை விழாவை முன்னிட்டு, அண்ணா பூங்காவில் மலர்க்கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சி, ஓவியங்கள், அரிய புகைப்பட கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள், செல்லப்பிராணிகள் கண்காட்சி, படகு போட்டிகள் நடத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதேபோல், மேட்டூர் அணை பூங்காவிற்கு விடுமுறை தினமான இன்று சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

அவர்கள் அணை பூங்காவிற்கு சென்று ஊஞ்சலாடியும், சறுக்கியும் விளையாடினர். அங்குள்ள மீன்காட்சி சாலை, பாம்பு பண்ணை, முயல் பண்ணை, மான் பண்ணை ஆகியவற்றை கண்டு மகிழ்ந்தனர். இதேபோல் இடைப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டியில் இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்தினருடன் வந்த மக்கள், விசை படகில் சவாரி செய்து இயற்கை காட்சிகளை கண்டுகளித்து பொழுதை கழித்தனர்.

The post வார விடுமுறையையொட்டி ஏற்காடு, பூலாம்பட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: படகு சவாரி செய்து உற்சாகம் appeared first on Dinakaran.

Related Stories: