திண்டுக்கல்லில் தேசிய கண்காட்சி கலக்கிய விசிறிவால் கருங்கீரி, செங்கீரி சேவல்கள்: ரூ.20 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை விலை போனது

திண்டுக்கல்: தேசிய அளவிலான சேவல் கண்காட்சி  திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் கிளிமூக்கு, விசிறிவால் உள்ளிட்ட ரகங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட சேவல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. திண்டுக்கல் அருகே குட்டியபட்டியில் 7வது ஆண்டு தேசிய அளவிலான சேவல் கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் சேவல்களுடன் கலந்து கொண்டனர். கண்காட்சியில் கிளிமூக்கு, விசிறிவால், கருங்கீரி, செங்கீரி, மயில் கீரி, செம்பொன்ராம் உள்பட 400க்கும் மேற்பட்ட சேவல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. உடலமைப்பு, வாலின் நீளம், மூக்கின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த சேவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

கண்காட்சியில் இடம் பெற்ற சேவல்கள் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை விலை போனது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களும் தங்களுடைய சேவல்களுடன் கண்காட்சியில் பங்கேற்றனர். கண்காட்சியில்  கிளிமூக்கு, விசிறிவால் ரகத்தை சேர்ந்த சேவல்கள் பார்வையாளர்களை வெகுவாக  கவர்ந்தது. சேவல் வளர்ப்பவர்கள் கூறுகையில், ‘‘இந்த சேவல்களுக்கு கம்பு, சோளம், நவதானியம், பாதாம் மற்றும் பிஸ்தா போன்றவை உணவாக தரப்படுகிறது. சாதாரண சேவல்களுக்கும், கிளிமூக்கு, விசிறிவால் சேவல்களுக்கும் வால் வித்தியாசமாக காணப்படும்.  வால் மட்டுமே 2 முதல் 3 அடி வரை வளரும். இவற்றின் தலையில் கொண்டை போன்ற அமைப்பும், கிளிக்கு உள்ளது போன்ற மூக்கும் காணப்படும்’’ என்றனர்.

Related Stories: