பெரம்பூர் கிராமத்தில் முறிந்து விழும் நிலையில் மின்கம்பம்-புதிதாக மாற்ற வலியுறுத்தல்

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம் ஊராட்சியை சேர்ந்த பெரம்பூர் கிராமம் பாப்பா குளக்கரை என்ற இடத்தில் மின்மாற்றி அமைந்துள்ளது. இந்த மின்மாற்றியிலிருந்து அங்குள்ள 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மின்சாரம் செல்கிறது. இந்த மின்சாரம் தெருவிளக்கு எரிவதற்கும், வீடுகளில் மின்விளக்கு எரிவதற்கும், மின் சாதனங்கள் இயங்குவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாப்பாகுளக்கரையில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ள 2 மின்கம்பங்களில் ஒரு மின்கம்பம் அடிப்பகுதியில் சிமெண்ட் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து உள்ளே உள்ள கம்பிகள் தெரிந்த வண்ணம் இருந்து வருகிறது.

இந்த மின் கம்பம் எந்த நேரத்திலும் முறிந்துவிழும் ஆபத்தான நிலையில் உள்ளது. பாப்பாகுளக்கரை பகுதியில் எந்த நேரமும் சிறுவர் முதல் பெரியோர் வரை நடமாடும் முக்கிய இடமாகவும் விவசாயிகள் அந்த பகுதியில் அடிக்கடி வந்து செல்லும் இடமாகவும் இருப்பதால் திடீரென மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக இந்த ஆபத்தான மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: