பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்று பேசிய பாஜக வேட்பாளர் பிரசாரம் செய்ய தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்று குறிப்பிட்ட சமூகத்தினரை குறிப்பிட்டு பேசிய உத்தரபிரதேச பாஜக வேட்பாளரை, பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் திலோய் சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளர் மயங்கேஷ்வர் சரண் சிங், தனது தேர்தல் பிரசாரத்தின் போது, ‘நீங்கள் இந்தியாவில் இருக்க வேண்டும் என்றால் (குறிப்பிட்ட சமூகத்தினரின் பெயரை குறிப்பிட்டு) ‘ராதே-ராதே’  என்று சொல்ல வேண்டும்; இல்லையெனில் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்தியாவில் தங்கியிருந்த சிலர் பாகிஸ்தானுக்குச் சென்றதைப் போல நீங்களும் போக வேண்டிவரும்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இவர் பேசிய வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலானது. இவ்விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது.

தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘தேர்தல் பிரசாரத்தின் போது நடத்தை விதிகளை மீறிய புகாரின் அடிப்படையில் பாஜக வேட்பாளர் மயங்கேஷ்வர் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வகுப்புவாத கருத்துகளை தெரிவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பொறுப்பற்ற முறையிலும், ஆத்திரமூட்டும் வகையிலும் பேசியுள்ளார். இவரது பேச்சானது சமூகத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க வழிவகுக்கும். எனவே, அவர் உத்தரபிரதேச தேர்தலில் 24 மணி நேரம் (இன்று வரை) எப்பகுதியிலும் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டுள்ளது.

Related Stories: