சிதம்பரம் தீட்சிதர்கள் ‘நடராஜருக்கு’ துரோகம்: முத்தரசன் வேதனை

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு இந்தியா மட்டுமில்லாது வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். தீட்சிதர்கள் இந்த ஆலயத்தை அவர்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு விரும்புகிறபடி எல்லாம் செய்வது நடராஜருக்கு செய்யும் துரோகமாகும். தற்போதுள்ள தீட்சிதர்கள் சாதி பார்ப்பதும், இழிவாகப் பேசுவதும், தாக்குவதும் நடந்து வருகிறது.

தீண்டாமை, பணக்காரர் பாகுபாடு பார்க்கப்படுகிறது. அதனால் தமிழக அரசு தனிச்சட்டம் இயற்றி இந்த கோயில் நிர்வாகத்தை ஏற்க வேண்டும். வழக்குப் பதிவு செய்யப்பட்ட தீட்சிதர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது ஆச்சரியம்.  தீட்சிதரை தீட்சிதர்களே தாக்குகிறார்கள். கடலூர் மாவட்ட காவல்துறை அவர்களை கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால், வருகிற 26ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பக்தர்களுக்கு எந்தவித பாதிப்பும், இடையூறுமின்றி சிதம்பரம் நடராஜர் கோயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

சட்டமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்களும், மற்ற கட்சி எம்எல்ஏக்களும் இதுபற்றி பேசுவார்கள். எடப்பாடி பழனிசாமி, பாஜக அண்ணாமலை போன்றவர்கள் தேர்தலில் தோற்றுப் போய்விடுவோம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். அதனால் தேர்தல் ஒழுங்காக நடைபெறவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு முத்தரசன் கூறினார்.

Related Stories: