துட்டு கொடுத்தால்... ஓட்டு இல்லை அதிரடி காட்டிய வாக்காளர்கள்: செலவு குறைந்த சந்தோஷத்தில் வேட்பாளர்கள்

நெல்லை: தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரசாரம் நாளை 17ம் தேதி மாலையுடன் நிறைவடைகிறது. இதனால் நெல்லை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பணம் படைத்த வேட்பாளர்கள் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என கடைசி ஆயுதமாக வாக்காளர்களுக்கு வைட்டமின் ‘‘சி’ வழங்குவதாக பேசப்படுகிறது. ஆனால், தேர்தலில் வாக்களிக்க பணம் பெறுவதில்லை என நெல்லையில் பெருமாள்புரம் அன்புநகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் தடாலடி முடிவு எடுத்துள்ளனர்.

இதனை தங்கள் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உணர்த்த அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பாக நேற்று ஒன்று கூடி மெழுகுவர்த்தி ஏற்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுக்கு பணம் பெறமாட்டோம் என சபதம் ஏற்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பணம் பெற்று ஓட்டு அளித்தால் நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்யமுடியாது. அவர்கள் வெற்றி பெறும் பட்சத்தில் நமக்கான தேவைகளை அவர்களிடம் கேட்டுப் பெற முடியாது. ஆகவே ஓட்டுக்கு பணம் பெறமாட்டோம் என மெழுகு வர்த்தி ஏற்றி சபதம் ஏற்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம் என்றனர். இச் சம்பவம் அப்பகுதி மக்களிடம் வியப்பையும் வேட்பாளர்களிடம் இன்ப அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: