மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலையில் நடை திறப்பு: இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி

திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மாசி மாத பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று (12ம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று அதிகாலை 5 மணிக்கு  கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷ பூஜை உள்பட வழக்கமான பூஜைகள் தொடங்கும். வரும் 17ம் தேதி வரை தினமும் நெய்யபிஷேகம், படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இன்று முதல் 5 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் 15 ஆயிரம் பக்தர்கள்  தினமும் தரிசனம் செய்யலாம். பக்தர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். வரும் 17ம் தேதி  இரவு கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் மாசி மாத பூஜைகள் நிறைவடையும். மீண்டும் பங்குனி உத்திர திருவிழா மற்றும் பங்குனி மாத பூஜைகளுக்காக மார்ச்  8ம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும். 9ம் தேதி பங்குனி உத்திர  திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும்.

Related Stories: