திருவனந்தபுரத்தில் இளம் பெண் குத்தி கொலை குமரி வாலிபர் அதிரடி கைது -ஆரல்வாய்மொழி சுங்க அதிகாரி, மனைவி, மகள் கொலை வழக்கில் சிறை சென்றவர்

திருவனந்தபுரம் : கேரள  மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பட்டப்பகலில்  செடிகள் விற்பனை செய்யும் கடையில் புகுந்து பெண் ஊழியரை குத்திக் கொன்ற  சம்பவத்தில் குமரி மாவட்டத்தில் சுங்க அதிகாரி, மனைவி மற்றும் மகளை கொலை செய்த வழக்கு குற்றவாளி கைது செய்யப்பட்டார்.கேரள மாநிலம் திருவனந்தபுரம்  அருகே நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர் வினிதா (38). பேரூர்க்கடை அருகே உள்ள  ஒரு செடிகள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 6ம்  தேதி கடையில் கத்தியால் குத்திக் கொலை  செய்யப்பட்டார். அவரது கழுத்தில் கிடந்த 4  பவுன் செயினும் திருடப்பட்டிருந்தது. இது குறித்து பேரூர்க்கடை போலீசார் வழக்கு  பதிவு செய்து விசாரித்தனர். கடை அருகே  இருந்த கண்காணிப்பு  கேமராவையும் பரிசோதித்தனர்.

அப்போது தொப்பி அணிந்த ஒரு வாலிபர்  கடையில் இருந்து வெளியே வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை  தீவிரப்படுத்தினர். இதற்கிடையே மர்ம நபர் ஒரு ஆட்டோவில் சென்றது  கண்டுபிடிக்கப்பட்டது. ஆட்டோ டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது ஆட்டோவில் ஏறிய நபர் மலையாளம் சரிவர பேசவில்லை என்பது  தெரியவந்தது.

இதனால் கொலையாளி வெளிமாநிலத்தை சேர்ந்தவராக  இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

இதையடுத்து நடந்த தீவிர  விசாரணையில் இளம் பெண்ணை கொன்றது குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது   தெரியவந்தது. இதையடுத்து பேரூர்க்கடை போலீசார் குமரி மாவட்டம் வந்து  வெள்ளமடம் பகுதியை சேர்ந்த மெர்வின் ராஜேந்திரன்(38) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் இவர் திருவனந்தபுரம் பேரூர்க்கடையில் ஒரு டீக்கடையில்  பணிபுரிந்து வருவது தெரிய வந்தது. அவரை திருவனந்தபுரம் கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தினர்இது குறித்து திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் ஸ்பர்ஜன்குமார் கூறியதாவது:

வினிதா கொல்லப்பட்ட வழக்கில் நடத்திய விசாரணையில் கொலையாளி குமரி மாவட்டம் வெள்ளமடத்தை சேர்ந்த மெர்வின் ராஜேந்திரன் என்று தெரிய வந்துள்ளது. இவர் ஒரு கொடும் குற்றவாளியாவார். 2014ம் ஆண்டு ஆரல்வாய்மொழியில் ஓய்வு பெற்ற சுங்கத்துறை ஊழியர் சுப்பையா, மனைவி மற்றும் மகளை கொலை செய்த வழக்கில் முதல் குற்றவாளியாவார். இந்த வழக்கில் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்த இவர் கடந்த டிசம்பர் மாதம் பேரூர்கடை டீக்கடையில் வேலைக்கு சேந்தார். எப்போதும் கத்தி வைத்திருப்பார். கடந்த 6ம் தேதி முழு ஊரடங்கின்போது டீக்கடை மூடப்பட்டதால் இவர் செயின் பறிப்பில் ஈடுபட சென்றுள்ளார். அப்போது செடிக்கடையில் வினிதா மட்டும் தனியாக இருப்பதை பார்த்து அவரை கத்தியால் குத்தி நகையை பறித்துள்ளார். இவர் மீது தமிழகத்தில் மேலும் பல  வழக்குகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

கையில் ஏற்பட்ட காயம் காட்டிக்கொடுத்தது

 வினிதாவை கத்தியால் குத்தும் போது மெர்வினின் கையில் லேசான காயம் ஏற்பட்டது. போலீஸ் விசாரணையில் இது தெரியவந்தது. கொலைக்குப் பின்னர் தான் பணிபுரியும் டீக்கடைக்கு சென்ற மெர்வின், அங்கிருந்தவர்களிடம் சமையலறையில் வைத்து தன்னுடைய கையில் காயம் ஏற்பட்டதாகவும் சிகிச்சைக்காக ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு மறுநாள் நாகர்கோவிலுக்கு புறப்பட்டு சென்றான்.

இதற்கிடையே பேரூர்க்கடை  மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஓட்டல்கள் மற்றும் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் யாராவது கையில் காயத்துடன் உள்ளார்களா என போலீசார் விசாரித்தனர். மெர்வின் பணிபுரிந்த டீக்கடையிலும் போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணையில் தான் மெர்வின் போலீசிடம் வசமாக சிக்கினான். போலீசார் கைது செய்தபோது தன்னுடைய பெயர் ராஜேஷ் என முதலில் கூறினான். ஆனால் தீவிர விசாரணையில் அவன் தான் வெள்ளமடத்தில் மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியான மெர்வின் ராஜேந்திரன் என தெரியவந்தது.

துடிதுடித்து சாகும் வரை பார்த்து ரசித்த மெர்வின்

திருவனந்தபுரத்தில் கடந்த 6ம் தேதி முழு ஊரடங்கு தினத்தன்று ஏதாவது ஒரு பெண்ணிடமிருந்து செயினை பறிக்கும் எண்ணத்தில் தான் மெர்வின் ராஜேந்திரன் வெளியே புறப்பட்டு சென்றான். அப்போது வழியில் பார்த்த ஒரு பெண்ணின் பின்னால் அவன் சென்றான். ஆனால் அந்தப் பெண்ணிடமிருந்து மெர்வினால் செயினை பறிக்க முடியவில்லை. அப்போதுதான் வழியில் வினிதா கடையிலிருந்து செடிகளுக்கு தண்ணீர் நனைத்துக் கொண்டிருந்ததை பார்த்துள்ளான்.

 கடையில் வேறு யாரும் இருக்கிறார்களா என்பதை நோட்டமிடுவதற்காக செடி வாங்குவது போல வினிதாவிடம் பேச்சு கொடுத்தான். மெர்வினின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த வினிதா கூக்குரலிட தொடங்கினார். உடனே அவரது வாயை பொத்தி கடையின் பின்புறம் கொண்டு சென்று கழுத்தில் கத்தியால் சரமாரியாக குத்தினான்.

இதில் வினிதா ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அவர் துடிதுடித்து சாகும் வரை மெர்வின் அங்குள்ள படிக்கட்டில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தான். வினிதா இறந்தது உறுதியான பின்னர்தான் அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை பறித்துக் கொண்டு சென்றான்.

Related Stories: