அரூர் அருகே மலைகிராமத்தில் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து சீரழித்த 10 பேர் கும்பலுக்கு வலை

* பிறந்த குழந்தையை 2 லட்சத்துக்கு விற்ற தாய்

* ஒன்றரை ஆண்டுக்குப் பின் விசாரணை துவக்கம்

தர்மபுரி: அரூர் அருகே மலை கிராமத்தில் 10 பேர் கும்பல், சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ததில் பிறந்த குழந்தையை, அவரது தாய் பணத்துக்காக விற்றார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த கேரளா போலீசார், ஒன்றரை ஆண்டுக்கு பின் அரூர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தர்மபுரி மாவட்டம், அரூர் கத்திரிப்பட்டி அடுத்த காரப்பாடி மலைக்கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். கடந்த 1.6.2017 முதல் 28.2.2018 காலக்கட்டத்தில் அந்த சிறுமியை, 10 பேர் கொண்ட கும்பல், வீட்டின் அருகே உள்ள காட்டில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் கூறிய போது, அவர் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், அந்த சிறுமி கர்ப்பமானார். அவருக்கு கடந்த 2018ல் பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை ₹2 லட்சத்திற்கு சிறுமியின் தாயார் விற்று விட்டார்.

இதனிடையே, சிறுமியின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் சித்தப்பா பாண்டுரங்கனின் மகன் ஹரிகிருஷ்ணன் (24), வீட்டில் யாரும் இல்லாத போது, சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில், அந்த சிறுமி மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார்.  இதையடுத்து, கடந்த 22.9.2019ல் திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு, தனியாக ரயிலில் சென்ற சிறுமி, கேரள மாநிலம் கோழிக்கோடு ரயில் நிலையத்திற்கு சென்றுவிட்டார். அங்கு நள்ளிரவில் இறங்கி மொழி தெரியாமல் தவித்த சிறுமியை மீட்ட ரயில்வே போலீசார், விசாரணைக்கு பின் சிறுமியை காப்பகத்தில் சேர்த்துள்ளனர். விசாரணையில் மீட்கப்பட்ட சிறுமி தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் என்பதும், 10 பேர் கும்பல் கூட்டு பலாத்காரம் செய்தது உள்ளிட்ட விவரங்கள் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த கேரளா போலீசார், சம்பவம் நடந்த இடம் தர்மபுரி மாவட்டம் அரூர் என்பதால், வழக்கை அரூர் காவல் நிலையத்திற்கு மாற்றியுள்ளனர். மேலும், சிறுமி அளித்த புகாரின் பேரில், அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சரோஜா, கூட்டு பலாத்காரம் செய்த 10 பேர் கும்பல் மற்றும் சிறுமியின் அண்ணன் ஹரிகிருஷ்ணன் என 11 பேர் மீது, 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் கடந்த 22.9.2019ல் கர்ப்பமாக இருந்த சிறுமிக்கு பிறந்த குழந்தை தற்போது எங்குள்ளது?. 2019 செப்டம்பர் மாதம் வழக்குபதிவு செய்த ரயில்வே போலீசார், ஒன்றரை ஆண்டுக்கு பின் வழக்கை அரூர் காவல் நிலையத்துக்கு மாற்றியது ஏன்? என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் உள்ளது. இந்த வழக்கில் மாவட்ட எஸ்பி நேரடி விசாரணை நடத்தினால் மட்டுமே, இந்த மலைகிராம சிறுமிக்கு நடந்த கொடுமைகள், உடந்தையாக இருந்தவர்கள் மற்றும் குற்றவாளிகள் வெளியே தெரிய வரும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: