காரைக்குடி அருகே நெகிழ்ச்சி; பிறந்த மருத்துவமனையில் டாக்டர்களுக்கு மரியாதை: 67 வயது முதியவர் அசத்தல்

காரைக்குடி: புதுக்கோட்டை மாவட்டம், நச்சாந்துபட்டியை சேர்ந்தவர் பெரியகருப்பன்(67). தற்போது மதுரையில் வசித்து வருகிறார். இவர் கடந்த 1955ல் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கானாடுகாத்தானில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்தார். பிரசவத்தின் போது மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த இவரது தாய் சிவகாமியையும், இவரையும் அரசு மருத்துவர்கள் போராடி காப்பாற்றினர். இதுகுறித்து அவரது தாய், பெரியகருப்பனுக்கு ஒவ்வொரு தருணத்திலும் நினைவுப்படுத்தி வந்துள்ளார்.

எனவே, பிறந்த மருத்துவமனைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என தனது 17 வயது முதல் பெரியகருப்பன் நினைத்து வந்தார். இந்நிலையில் பெரியகருப்பன் தனது 67வது பிறந்தநாளை நேற்று கானாடுகாத்தான் அரசு மருத்துவமனையில் கொண்டாடினார். அப்போது தனது ஆசையை நிறைவேற்றும் விதமாக அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோரை கவுரவித்து பொன்னாடை போர்த்தி, நினைவுப்பரிசு வழங்கினார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த கர்ப்பிணி பெண்களுக்கு உணவு வழங்கினார்.

இதுகுறித்து பெரியகருப்பன் கூறுகையில், ‘‘மருத்துவ வசதி போதிய அளவில் இல்லாத போதே மிகவும் ஆபத்தான நிலையில் இம்மருத்துவமனையில் சிகிச்சை அளித்து பிரசவம் பார்த்துள்ளனர். இம்மருத்துவமனைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எனது 50 ஆண்டு கால ஆசை தற்போது நிறைவேறி உள்ளது’’ என்றார்.

Related Stories: