லதா மங்கேஷ்கரின் இறுதிச்சடங்கில் ஷாருக்கான் செயலை புரியாமல் விமர்சிப்பதா?: நடிகை ஊர்மிளா கோபம்

மும்பை: கடந்த 6ம் தேதி மும்பையில் காலமான பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதிச்சடங்கு அன்று மாலை மும்பை சிவாஜி பூங்கா மைதானத்தில் நடந்தது. தனது மேலாளர் பூஜா தத்லானியுடன் பங்கேற்ற பாலிவுட் நடிகர் ஷாருக்கான்,  லதா மங்கேஷ்கரின் உடல் மீது மலர்வளையம் வைத்து, அவரது கால்களை தொட்டுக் கும்பிட்டு சுற்றி வந்தார். பிறகு லதா மங்கேஷ்கரின் உடலுக்கு முன்னால் நின்று ‘துஆ’ செய்த பின்பு தனது முகக்கவசத்தை நீக்கிவிட்டு ஊதினார். அவர் ‘துஆ’ செய்து ஊதிய போட்டோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. ஷாருக்கானுடன் வந்த பூஜா தத்லானி, தனது கைகளைக் கூப்பி லதா மங்கேஷ்கருக்கு மரியாதை செலுத்தினார். இந்த போட்டோக்களை பார்த்த பலர், ‘இவர்கள் இந்தியாவின் பன்முகத்தன்மையை அழகாக படம்பிடித்துக் காட்டியுள்ளனர்’ என்று பாராட்டினர்.

ஆனால், லதா மங்கேஷ்கரின் உடலில்  ஷாருக்கான் எச்சில் துப்பிவிட்டதாக (துஆ செய்ததை) பலர் தவறான கருத்துகளை பதிவிட்டனர். இஸ்லாமியர்கள் வழக்கப்படி ஷாருக்கான் செய்த விஷயம்  தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது மிகப்பெரிய விவாதமாக மாறியது. அதோடு, ஷாருக்கான் அருகில் நின்றவர் அவரது மனைவி கவுரி கான் என்றும் தவறாக பதிவிட்டு சர்ச்சை கருத்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், பாலிவுட் நடிகையும், சிவசேனா கட்சி தலைவர்களில் ஒருவருமான ஊர்மிளா மடோன்கர் வெளியிட்ட பதிவில், ‘பிரார்த்தனை செய்வதை எச்சில் துப்புவது என்று நினைக்கும் அளவுக்கு நாம் சமூகத்தை சீரழித்துவிட்டோம். நாட்டை பிரதிநிதிப்படுத்தி வரும் சர்வதேச நடிகர் குறித்து விமர்சனம் செய்கிறீர்கள். இன்றைய அரசியல் மிகவும் கேவலமான நிலையை அடைந்துள்ளது. நிஜமாகவே இதுபோன்ற விமர்சனங்கள் அதிக வருத்தத்தை அளிக்கிறது’ என்று கோபமாக கூறியுள்ளார்.

Related Stories: