மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தும்படி ஆளுநரை சந்தித்து வலியுறுத்த விவசாயிகள் டிராக்டர் பேரணி: திருச்சியில் போலீசார் தடுத்ததால் மறியல்

திருச்சி: விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும். விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களின் தலையீடுகளை ஒன்றிய பாஜ அரசு தடுக்க வேண்டும். டெல்லியில் போராடிய விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஆளுநர் மாளிகைக்கு பேரணியாக சென்று மனு அளிப்பது என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி, நேற்று காலை 11 மணியளவில் திருச்சி மாவட்டம் சமயபுரம் நம்பர் 1 டோல்கேட்டில் இருந்து சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் 50க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் சென்னைக்கு பேரணியாக புறப்பட்டனர். தகவலறிந்து சென்ற போலீசார், விவசாயிகளை தடுத்து நிறுத்தி பேரணிக்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் விவசாயிகள் டிராக்டர்களை சாலையின் குறுக்கே நிறுத்தி திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து விவசாயிகளை போலீசார் சமரசம் செய்து அனுப்பினர். இந்த போராட்டத்தால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி அய்யாக்கண்ணு கூறுகையில், மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவதோடு, நெல் குவிண்டாலுக்கு ரூ.5,000ம், ஒரு டன் கரும்புக்கு ரூ.8,000ம் ஒன்றிய அரசு கொடுக்க வேண்டும்.  விவசாயிக்கு காப்பீட்டு தொகையை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க இருந்தோம். போலீசார் தடுத்துவிட்டனர் என்றார்.

Related Stories: