3 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் ஒதுக்காததால் மோடி, அமித் ஷா உருவ பொம்மைகள் எரிப்பு: மணிப்பூர் பாஜக அலுவலகம் சூறை

இம்பால்: மணிப்பூரில் 3 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் கொடுக்காததால் மோடி, அமித் ஷா, மாநில முதல்வரின் உருவ பொம்மையை அதிருப்தி கோஷ்டிகள் எரித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் பாஜக தலைமையிலான நாகா மக்கள் முன்னணி மற்றும் தேசிய மக்கள்  கட்சியின் சார்பில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பிரேன்  சிங் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஹீங்காங்கில் போட்டியிடுகிறார். அவர், பாஜக தனித்து ஆட்சி  அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

பாஜக சார்பில் 60 தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று சிட்டிங் எம்எல்ஏக்களான சரத்சந்திர சிங் (மொய்ராங்), ரமேஷ்வர் சிங் (கக்சிங்), ஒய் எரபோட் சிங் (வாங்கேய்) ஆகியோருக்கு சீட் வழங்கப்படவில்லை. அவர்களுக்குப்  பதிலாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏக்கள் எம்.பிரிதிவிராஜ், யெங்கோம்  சுர்சந்திர சிங், ஒக்ரம் ஹென்றி சிங் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். பாஜகவின் இந்த வேட்பாளர் பட்டியலைக் கண்டித்து மணிப்பூரில் பல்வேறு இடங்களிலும் போராட்டமும் வன்முறையும் அரங்கேறி வருகிறது.

உருவ பொம்மை எரித்து போராட்டம் பாஜக நிர்வாகிகள் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்து, கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களிலும் கட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. இதையடுத்து இம்பாலில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தைச் சுற்றிப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சீட் கிடைக்காத பல பாஜக நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த  சில நாட்களுக்கு முன் முன்னாள் அமைச்சர் நிமைசந்த் லுவாங், மூத்த நிர்வாகி  தங்கஜம் அருண்குமார் ஆகியோருக்கு சீட் மறுக்கப்பட்டதால், அவர்கள் பாஜகவில்  இருந்து விலகிய சில மணி நேரங்களில் ஜேடியூ கட்சியில் இணைந்தனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

Related Stories: