செந்துறை பகுதியில் தனிப்படை போலீசார் அதிரடி தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது-17 பவுன் நகை, பைக், ரூ. 60 ஆயிரம் பறிமுதல்

செந்துறை : செந்துறை சுற்று வட்டாரப்பகுதியில் மிளகாய் பொடி வீசி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்களை தனிப்படை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.6லட்சம் மதிப்பிலான 17 பவுன் நகை, ரூ. 60 ஆயிரம், பைக்கை பறிமுதல் செய்தனர்.அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள இரும்புலிக்குறிச்சி, செந்துறை , அதனை சுற்றியுள்ள பகுதியில் பைக்கில் வந்த இருவர் மிளகாய் பொடி வீசி இருசக்கர வாகன ஓட்டிகளிடமிருந்து, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து அரியலூர் மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி , ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கலைக்கதிரவன் வழிகாட்டுதலின் படி எஸ்ஐ பழனிவேல் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் குற்றவாளிகள் கடந்த 28ம் தேதி அன்று நல்லாம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த செந்துறை ஜவுளிக்கடை வைத்துள்ள பெண்மணியிடம் இருந்து 6 பவுன் தாலிச்செயினை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர். இதுகுறித்து போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகள் குறித்து கிடைத்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று உடையார்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த செந்துறை அருகிலுள்ள பூமுடையான் குடிகாடு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ் (27), அதே கிராமம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ் (24) ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் இருவரும் பல்வேறு தொடர் செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்டு வந்தனர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து இருவரையும் உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி மற்றும் தனிப்படையினர் கைது செய்து இரும்புலிக்குறிச்சி காவல் நிலையம் கொண்டு வந்தனர். இவர்கள் இருவரும் 7 செயின் பறிப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 6 லட்சம் மதிப்புள்ள 17 சவரன் நகை, 60 ஆயிரம் ரூபாய் பணம், பயன்படுத்திய பைக் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

செந்துறை பகுதியில் தொடர் திடுட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதால் இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் நிம்மதி அடைந்துளளனர். மேலும் போலீசாரின் உடனடி நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Stories: