கலசபாக்கம் அருகே அரசு பள்ளியில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட ஹெச்.எம், ஆசிரியர் சஸ்பெண்ட்: வீடியோ வைரலால் சிஇஓ நடவடிக்கை

கலசபாக்கம்: திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக அண்ணாமலை(58) என்பவர் உள்ளார். இப்பள்ளியில் மாற்றுத்திறனாளியான ஆசிரியர் செழியன்(50) பணிபுரிந்து வருகிறார். குடியரசு தினத்தன்று கொடியேற்றும் விழாவுக்கு காலதாமதமாக வந்த செழியன் உட்பட 5 ஆசிரியர்களை பள்ளி தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக, மறுநாள் பள்ளியில் தலைமை ஆசிரியருக்கும், ஆசிரியர் செழியனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறி சட்டையை பிடித்து இழுத்து தரையில் கட்டிப்புரண்டு சண்டையிட்டுள்ளனர். இந்த சம்பவத்தை சக ஆசிரியர்கள் சிலர் வீடியோ எடுத்துள்ளனர்.

தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது குறித்து தகவலறிந்த போளூர் மாவட்ட கல்வி அலுவலர் தயாளன் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர், விசாரணை தொடர்பான அறிக்கையை, முதன்மை கல்வி அலுவலர் அருட்செல்வத்திடம் வழங்கினார். இதையடுத்து முதன்மை கல்வி அலுவலர், பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட தலைமை ஆசிரியர் அண்ணாமலை மற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர் செழியன் ஆகிய 2 பேரையும் நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மற்றொரு ஆசிரியரும் சஸ்பெண்ட்: இச்சம்பவத்தில் தொடர்புடைய முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் என்பவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: