யு 19 உலக கோப்பை கிரிக்கெட்; பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதியில் ஆஸ்திரேலியா.! இந்தியா-வங்கதேசம் இன்று மோதல்

ஆன்டிகுவா: 16 அணிகள் பங்கேற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான 14வது உலக கோப்பை (50ஓவர்) தொடர் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 3வது கால்இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 276 ரன் எடுத்தது. அதிகபட்சமாக டீக் வில்லி 71, கோரி மில்லர் 64 ரன் எடுத்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் கேப்டன் காசிம் அக்ரம் 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் 35.1 ஓவரில் 157 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 119 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தான் அணியில் மெக்ரான் மும்தாஜ் 29 ரன் எடுத்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் வில்லியம் சால்ஸ்மேன் 3 விக்கெட் சாய்த்தார். அந்த அணியின் டீக்வில்லி ஆட்டநாயகன் விருது பெற்றார். இன்று நடைபெறும் கடைசி கால் இறுதி போட்டியில் இந்திய அணி வங்கதேசத்துடன் மோதுகிறது. இந்த போட்டி ஆண்டிகுவா சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இந்திய அணி, லீக் சுற்றில் பி பிரிவில் தென்ஆப்ரிக்கா, அயர்லாந்து, உகான்டாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. கேப்டன் யாஷ்துல் உள்பட 6 பேர் கொரோனா தொற்றால் கடைசி 2 லீக் போட்டியிலும் ஆட வில்லை.

இந்நிலையில், நிஷாந்த் சிந்துவை தவிர மற்ற அனைவரும் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதால் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குகின்றனர். மறுபுறம் நடப்பு சாம்பியன் வங்கதேசம் குரூப் ஏ பிரிவில் முதல் போட்டியில் இங்கிலாந்திடம் தோற்றாலும், கனடா, ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது. கடந்த 2020ம் ஆண்டு உலக கோப்பை பைனலில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்திடம் தோற்றது. அதற்கு இன்று பழிதீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி, வரும் 2ம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதும். மற்றொரு அரையிறுதியில் 1ம்தேதி இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

Related Stories: