பூரன் – ராகுல் அதிரடி ஆட்டம் மும்பையை வீழ்த்தியது லக்னோ

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி 18 ரன் வித்தியாசத்தில் வென்றது. வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை பந்துவீசியது. கே.எல்.ராகுல், படிக்கல் இணைந்து லக்னோ இன்னிங்சை தொடங்கினர். துஷாரா வீசிய முதல் ஓவரில் படிக்கல் கோல்டன் டக் அவுட்டாக, எல்எஸ்ஜிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. ஸ்டாய்னிஸ் 28 ரன் (22 பந்து, 5 பவுண்டரி), தீபக் ஹூடா 11 ரன் எடுத்து பியுஷ் சாவ்லா சுழலில் விக்கெட்டை பறிகொடுக்க, லக்னோ 9.3 ஓவரில் 69 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.

இந்த நிலையில், ராகுல் உடன் ஜோடி சேர்ந்த நிகோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி மும்பை பந்துவீச்சை சிதறடித்தார். இமாலய சிக்சர்களாக தூக்கி மிரட்டிய பூரன் 19 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். மறு முனையில் ராகுல் 37 பந்தில் 50 ரன்னை எட்டினார். அபாரமாக விளையாடிய இருவரும் 4வது விக்கெட்டுக்கு 109 ரன் சேர்த்தனர். பூரன் 75 ரன் (29 பந்து, 5 பவுண்டரி, 8 சிக்சர்), அர்ஷத் 0, ராகுல் 55 ரன் (41 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க, 178/3 என்ற நிலையில் இருந்து 178/6 என லக்னோ திடீர் சரிவை சந்தித்தது. கடைசி கட்டத்தில் பதோனி – க்ருணால் பாண்டியா இணைந்து அதிரடி காட்ட, லக்னோ 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன் குவித்தது. பதோனி 22 ரன் (10 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), க்ருணால் 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் துஷாரா, சாவ்லா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்து, 18 ரன் வித்தியாசத்தில் தோற்றது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 68 ரன் (38 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். அதிரடியாக விளையாடிய திர் 28 பந்துகளில் 62 ரன்கள் (4 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார். லக்னோ பந்துவீச்சில் நவீன் உல்ஹக், பிஷ்னோயி தலா 2 விக்கெட், குர்னால் பாண்டியா, மோஷின் கான் தலா 2 விக்கெட் எடுத்தனர். லக்னோ அணி 7வது வெற்றியை பதிவு செய்து 14 புள்ளிகளுடன் 6வது இடம் பிடித்த ஆறுதலுடன் விடை பெற்றது. 5 முறை சாம்பியனான மும்பை அணி கடைசி இடம் பிடித்து வெளியேறியது.

The post பூரன் – ராகுல் அதிரடி ஆட்டம் மும்பையை வீழ்த்தியது லக்னோ appeared first on Dinakaran.

Related Stories: