இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி திடீர் ஓய்வு

டெல்லி: இந்திய கால்பந்து உலகில் ஐ.எம்.விஜயன், பாய்சுங் பூட்டியா வரிசையில் பிரபலமானவர் சுனில் சேத்ரி(39). உள்ளூர் போட்டிகளில் 2002ம் ஆண்டு அறிமுகமான சுனில், 2004ம் ஆண்டு இந்தியாவின் யு20, யு23 அணிகளுக்காக சர்வதேச அளவில் விளையாடினார் அடுத்த ஆண்டே இந்திய தேசிய அணிக்காக முன்கள வீரராக விளையாட ஆரம்பித்தார். யு20, யு23 அணிகளில் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்காக எதிராக களமிறங்கியது போல் சீனியர் அணியிலும் பாகிஸ்தானுக்கு எதராகதான் விளையாடி இருக்கிறார்.

தொடர்ந்து ஏஎப்சி சேலேஞ்ச் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டங்கள் மலேசியாவில் நடந்த போது 2012ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கூடவே மோன் பகான், ஈஸ்ட் பெங்கால் கிளப்களு்காகவும், ஐஎஸ்எல் தொடரில் பெங்களூர், மும்பை சிட்டி எப்சி, மீண்டும் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் சர்வதேச போட்டியில் இருந்து உலக கோப்பை தகுதிச் சுற்றுப்போட்டியின் 2வது கட்ட ஆட்டங்களுக்கு பிறகு ஓய்வு பெறப்போவதாக சுனில் அறிவித்துள்ளார்.

ஜூன் மாதம் 6ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் குவைத்தையும், 11ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் கத்தாரையும் இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது. இதில் கொல்கத்தாவில் நடக்க உள்ள குவைத்துக்கு எதிரான போட்டியுடன் சுனில் ஓய்வு பெறுவார். இந்த ஆட்டத்தில் வென்றால் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். கிரிக்கெட்டுக்கான வரவேற்பு அதிகம் உள்ள நாட்டில் கால்பந்தையும் கவனிக்க வைத்த வீரர்களில் ஒருவரான சுனிலின் முடிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சுனிலும், சாதனைகளும்
* இதுவரை 150 சர்வதேச ஆட்டங்களில் விளையாடி உளள சுனில் 94 கோல்கள் அடித்து சர்வதேச அளவில் 4வது இடத்தில் இருக்கிறார். முதல் 3 இடங்களில் ரொனால்டோ(128கோல், 206 ஆட்டம் போர்ச்சுகல்), அலி டாயி(108 கோல், 148 ஆட்டம், ஈரான்), லியோனல் மெஸ்ஸி(106கோல்கள், 180ஆட்டம், அர்ஜென்டீனா) ஆகியோர் உள்ளனர்.

* சுனிலின் திறனைப் பாராட்டி ஒன்றிய அரசு அர்ஜூனா(2011), பத்மஸ்ரீ(2019) விருதுகளைய வழங்கியுள்ளது.

* நேபாளத்தை பூர்விகமாக கொண்ட இவரது தந்தை கே.பி.சேத்ரி இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். இவரது தாய் சுசிலா, இவரது இரட்டைச் சகோதரிகள் நேபாள தேசிய அணிக்காக கால்பந்து விளையாடியவர்கள். செகந்திராபாத்தில் பிறந்தவர் சுனில்.

* ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் 155 ஆட்டங்களில் விளையாடி உள்ள சுனில் 61கோல்களை அடித்து அதிக கோலடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

* இந்திய அளவில் அதிக கோல் அடித்த வீரராக சுனில் இருக்க அடுத்த இடங்களில் விஜயன்(73 ஆட்டம், 32 கோல்), பூட்டியா(88ஆட்டம், 29 கோல்) ஆகியோர் அடுத்த 2 இடங்களில் இருக்கின்றனர்.

* இந்திய கால்பந்து கிளப்களுக்காக மட்டுமின்றி கேன்சஸ் சிட்டி விசார்ட்ஸ், யுனைடட் ஸ்போர்ட்ஸ் கிளப்(அமெரிக்கா), ஸ்போர்ட்டிங் சிபி-பி(ஸ்பெயின்) உட்பட பல வெளிநாட்டு கிளப்களுக்காவும் விளையாடியவர்.

* மகிழ்ந்த அப்பா… அழுத மனைவி…
ஓய்வு குறித்து சுனில், ‘சில மாதங்களாகவே ஓய்வு குறித்து யோசித்து வருகிறேன். எனது முடிவு குறித்து குடும்பத்தில் உள்ள அனைவரிடம் சொல்லிவிட்டேன். அப்பா ஒன்றும் சொல்லவில்லை. மாறாக மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் மனைவி கண்ணீர் விட்டார். கண்ணீருக்கான காரணம் அவருக்கே தெரியவில்லை. இந்த ஒய்வுக்காக இன்று மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் வருத்தத்தப் படுவேன். எனக்காக உதவிய பயிற்சியாளர்கள், அணி அலுவலர்கள், சக வீரர்கள், என் மீது அதிக அன்பு செலுத்தும் ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

The post இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி திடீர் ஓய்வு appeared first on Dinakaran.

Related Stories: