கோத்தகிரியில் லாங்வுட் சோலையில் அரிய வகை நீல நிற பூஞ்சான் கண்டுபிடிப்பு

ஊட்டி : கோத்தகிரியில் உள்ள லாங்வுட் சோலையில் அரிய வகை நீல நிற பூஞ்சான் முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீலகிரி  மாவட்டத்தில் உள்ள வனங்களில் பல்வேறு வகையான தாவரங்கள், பூஞ்சான்  ஆகியவைகள் காணப்படுகின்றன. சில இடங்களில் அரிய வகை தாவரங்கள் மற்றும்  பூஞ்சான்கள் காணப்படுகிறது. இந்நிலையில், கோத்தகிரி லாங்வுட் சோலையில் அரிய  வகை நீல நிற பூஞ்சான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   இது குறித்து  லாங்வுட்சோலை வாட்ச்டாக் கமிட்டி செயலர் ராஜூ கூறியதாவது:

கோத்தகிரி நகரின்  மையத்தில் அமைந்துள்ள லாங்வுட் சோலை பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது.  சுமார் 250 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்ந காடு மான்டேன்  சோலா என்ற காடு வகையைச் சேர்ந்தது. பல அரிய வகையான தாவரம் மற்றும்  உயிரினங்களை உள்ளடக்கிய பல்லுயிர்ச்சூழல் மண்டலமாக அறியப்படுகிறது. இந்த  சோலை கோத்தகிரி நகரின் மைக்ரோ சீதோஷ்ண நிலையை நிர்ணயிக்கிறது. 25  கிராமங்களுக்கு நீர் ஆதாரமாகவும் உள்ளது.

இங்கு வழக்கமான ஆய்வையும்  பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அரிய வகை நீல நிறமுள்ள  ‘கோபால்ட் கிரஸ்டு பங்கஸ்’ எனப்படும் வகை பூஞ்சானை  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றார். இது குறித்து கோத்தகிரி வனச்சரகர் சிவா  கூறுகையில், ‘‘ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜூ, நீல நிறத்தில் அரிய வகை பூஞ்சானை  கண்டுபிடித்துள்ளார். இந்த பூஞ்சான் குறித்து உரிய பதிவு செய்வதுடன்,  மேலும் தகவல்கள் பெறுவதற்கு வன உயிரின ஆய்வு மையத்திற்கு அனுப்பி  வைக்கப்படும்’’ என்றார்.

Related Stories: