சென்னை: சென்னையில் காற்றை சுவாசிப்பது என்பது ஒரு நாளைக்கு சுமார் 3.3 சிகரெட் புகைப்பதற்கு சமம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. டெல்லி போன்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது சுத்தமான நகரமாக இருந்து வந்த சென்னையில் இப்போது காற்று மாசு பெரிய அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் புகை மூட்டம் நகரம் முழுவதும் படர்ந்து, மூச்சு விட கடினமாக உள்ளது. சென்னையின் காற்று தர குறியீடு 160-ஐ தாண்டி உள்ளது. இது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் நிலையாக அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கடலோர காற்றால் சுத்தமாக இருந்த சென்னைக்கு இது ஒரு பெரிய மாற்றம். கடந்த ஆறு ஆண்டுகளில் நடப்பு டிசம்பர் மாதத்தில் தான் சென்னையில் காற்று மாசு மிக மோசமாக உள்ளது. சராசரி குறியீடு158 ஆக உள்ளது. மே 2021-ல் இது 53 ஆக இருந்தது. அது மிகக் குறைந்த மாசு நிலை. தற்போதைய அதிகரிப்புக்கு முக்கிய காரணம் மிக நுண்ணிய தூசி துகள்கள். இவை நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
சென்னையில் பொதுவாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் காற்று மாசு அதிகரித்து 100-ஐ தாண்டும். ஆனால் தற்போதைய நிலைமை இன்னும் மோசமாகி, கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. காற்று மாசு, நகரம் முழுவதும் இருந்தாலும், சில பகுதிகளில் மிக அதிகமாக உள்ளது. பெருங்குடியில் கிட்டத்தட்ட 200ஐ எட்டியுள்ளது. கொடுங்கையூரில் 170-க்கு மேல் பதிவாகியுள்ளது. சீனிவாசநகர் காலனி, காந்தி நகர், மணலி, அரும்பாக்கம் மற்றும் அமெரிக்க தூதரக பகுதி போன்ற இடங்களிலும் 170ஐ நெருங்கி உள்ளது. நிலைமை இவ்வளவு மோசமாகி விட்டதால், சென்னையில் சுவாசிப்பது என்பது ஒரு நாளைக்கு சுமார் 3.3 சிகரெட் புகைப்பதற்கு சமம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த அளவு காற்று மாசு சுவாச நோய்கள், இதய நோய்கள், கண் மற்றும் தோல் பிரச்னைகளை ஏற்படுத்தும். குளிர்காலத்தில் வானிலை காரணமாக மாசு தரையோடு சேர்ந்து இருப்பதால் ஆபத்து இன்னும் அதிகரிக்கிறது.
ஒரு கன மீட்டரில் 22 மைக்ரோகிராம் துகள் உள்ள காற்றை சுவாசிப்பது ஒரு சிகரெட் புகைப்பதற்கு சமம். இந்த அளவை தாண்டினால், குழந்தைகள் உட்பட அனைவரும் சிகரெட் புகையை சுவாசிப்பது போல் ஆகிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. உடனடியாக அரசு மாசு குறைக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பதுடன், நகர திட்டமிடுபவர்களும் நீண்ட கால திறமையான முறைகளை செயல்படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
