100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கம்; ஒன்றிய பாஜ அரசை கண்டித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது

 

சென்னை: 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து, தமிழக காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தின் பெயரையும், அந்தச் சட்டத்திலும் மாற்றங்களைச் செய்ய புதிய மசோதவை ஒன்றிய அரசு தயாரித்துள்ளது. ‘வளா்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதியளிப்புச் சட்டம்’ என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள மசோதாவை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஒன்றிய அமைச்சர் அறிமுகம் செய்து விளக்கி பேசினார்.
இந்த நிலையில், மசோதாவில் காந்தியின் பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று இந்தியா முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று தமிழக காங்கிரஸ் சார்பில், 100 நாள் வேலை திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதை வன்மையாக கண்டிக்கும் வகையில் சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலைய அலுவலகம் முன்பு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், இந்திய கூட்டணி கட்சிகளான திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, திக தலைவர் கி.வீரமணி, மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ அபுபக்கர், ஆம் ஆத்மி தலைவர் வசீகரன் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், கிருஷ்ணசாமி, மாநில துணை தலைவர் சொர்ணா சேதுராமன், அமைப்பு செயலாளர் ராம்மோகன், ஆர்டிஐ பிரிவு துணை தலைவர் மயிலை தரணி, மாநில செயலாளர் முனீஸ்வர் கணேசன், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், முத்தழகன், டில்லி பாபு, சர்க்கிள் தலைவர் கராத்தே செல்வம், ஜெயம் ஜே.கக்கன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், மகாத்மா காந்தி பெயரை நீக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

 

Related Stories: