முப்படை தளபதி மரணம் குறித்து அவதூறு பதிவிட்டவர் மீதான வழக்கு ரத்து

மதுரை: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த  முப்படைகளின் தளபதி குறித்து, முகநூலில் அவதூறாக பதிவு செய்ததாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து, ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததை அடுத்து, முகநூலில் அவதூறாக பதிவிட்டதாக  சிவராஜ பூபதி என்பவர் மீது  153, 504, 505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை ரத்து செய்யக்கோரி சிவராஜ பூபதி, ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘மனுதாரர் மீது 153, 504, 505(2) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால், அதுபோல மனுதாரர் எந்த செயலிலும் ஈடுபடவில்லை. ஆகவே அவர் மீது வழக்குப்பதிவு செய்தது செல்லாது’’ எனக்கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

உத்தரவின் முடிவில், ‘‘மனுதாரர் மகாபாரதத்தின் கடைசி அத்தியாயத்தை படிக்க வேண்டும் என விரும்புகிறேன். அனைவரும் இறந்துவிட்ட சூழலில், யுதிஷ்டிரன் கடைசியாக  செல்கிறான். அவர் சொர்க்கத்தின் உள்ளே நுழைந்ததும், அங்கே மகிழ்ச்சியுடன் துரியோதனன் அமர்ந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆத்திரம் நிறைந்து, கடுமையான வார்த்தைகளை உதிர்த்தார். நாரதர் புன்னகையுடன் அவரிடம், ‘‘அப்படி இருக்கக்கூடாது. யுதிஷ்டிரா. சொர்க்கத்தில் ​​அனைத்து பகைகளும் நின்றுவிடும். மன்னன் துரியோதனை அவ்வாறு சொல்லாதே’’ என குறிப்பிடுவார்.  அதுபோல உயிரிழந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத் குறித்து மனுதாரர் விமர்சித்திருக்கும் முறை நம் கலாச்சாரத்திற்கு உகந்தது அல்ல’’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: