கலசப்பாக்கம் அருகே பரபரப்பு; 4,560 அடி உயர பருவத மலையில் காஞ்சி கள்ளக்காதல் ஜோடி தற்கொலை: போலீசார் தீவிர விசாரணை

கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் அருகே பருவதமலையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடியினர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே 4,560 அடி உயர பருவத மலை உள்ளது. இந்த மலை உச்சிக்கு செல்லும் பாதையில் சுமார் 2 ஆயிரம் அடி உயரத்தில் நேற்று சிலர் ஆடு மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள மரத்தில் ஒரு ஆணும், பெண்ணும் ஒரே புடவையால் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே கடலாடி போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசார், வனத்துறையினர் மற்றும் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். சடலம் அழுகியிருந்ததால் தற்கொலை செய்து ஒரு வாரத்துக்கு மேலாகி இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். சடலங்களை மீட்டு டோலிகட்டி இன்று அதிகாலை 1.30 மணியளவில் கீழே கொண்டு வந்தனர். தொடர்ந்து மலையடிவாரத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சடலங்கள் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட 2 பைகளை போலீசார் சோதனை செய்தனர். அதிலிருந்த ஆதார் அட்டைகளை வைத்து நடத்திய விசாரணையில், தற்கொலை செய்தவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், மாடம்பாக்கம் அண்ணா நகரை சேர்ந்த ராஜசேகர் (43), பள்ளிக்கரணை நாராயணபுரத்தை சேர்ந்த அன்பழகன் மகள் தேவி (26) என்பது தெரியவந்தது.

ராஜசேகர் பிரிண்டிங் பிரஸ் வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள் உள்ளனர். இவரது பிரிண்டிங் பிரசில் தேவி வேலை செய்துள்ளார்.

அவர்களிடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த ராஜசேகரின் குடும்பத்தினர், அவரை கண்டித்துள்ளனர். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து எதிர்ப்பு ஏற்பட்டதால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கள்ளக்காதலர்கள் திடீரென மாயமாகினர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தேவியின் தந்தை அப்பகுதி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். வீட்டை விட்டு வெளியேறிய கள்ளாக்காதல் ஜோடி பல்வேறு இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளனர்.

பின்னர் ராஜசேகர், தேவியை 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார். அதை இருவீட்டாரும் ஏற்க மாட்டார்கள் என்பதால் பருதமலைக்கு வந்து தற்கொலை செய்து கொண்டது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து கடலாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்து செல்போன்களை போலீசார் மீட்டுள்ளனர். அதன் மூலம் யார், யாரிடம் பேசினார்கள், தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: