வெயிலின் தாக்கம் அதிகரிப்பு வெளியூர்களுக்கு இளநீர் அனுப்பும் பணி தீவிரம்

பொள்ளாச்சி :  பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் இளநீர் உற்பத்தி அதிகரித்தாலும், வெயிலின் தாக்கம் அதிகரிப்பால்  வெளியூர்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.  பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஒவ்வொரு ஆண்டும்  பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அதிகளவில், இளநீர் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.   கடந்த ஆண்டில் கொரோனா இரண்டாம் அலைக்கு பிறகு, ஆகஸ்ட் மாதம் முதல் இளநீர் விலை உயர்ந்தது. அந்நேரத்தில்,  தோட்டங்களில் நேரடி விலையாக  ஒரு இளநீர் ரூ.29வரை விலைபோனது.

 ஆனால், தென்மேற்கு பருவமழைக்கு பிறகு,  நவம்பர் மாதத்திலிருந்து இளநீர் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கியதுடன், அதன் விலை சரிந்தது. கடந்த இரண்டு மாதமாக, இளநீர் உற்பத்தி அதிகரித்தாலும் அந்நேரத்தில் வடகிழக்கு பருவமழையும் , அதன்பின் பனிப்பொழிவும் அடுத்தடுத்து இருந்ததால், விற்பனை மந்தமாகி  இளநீர் தேக்கம் அதிகரித்ததால், இந்த மாதம் துவக்கம் வரையிலும், பண்ணை தோட்டங்களில் ஒரு இளநீர் விலை ரூ.17ஆக சரிந்தது.

 இதற்கிடையே, கடந்த இரண்டு வாரமாக போதிய மழையில்லாமல் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியதால் பச்சை ரக இளநீர் மற்றும் செவ்விளநீரின் தேவை அதிகமாகி விற்பனை மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்தது. தற்போது இளநீர் உற்பத்தி அதிகமாக இருந்தாலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும். பெங்களூர், மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் கனரக வாங்கனங்களில் அனுப்பும் பணி தீவிரமடைந்துள்ளது.

 இளநீர் தேவை அதிகரிப்பால், அதன் விலையும் உயர துவங்கியுள்ளது. சுற்றுவட்டாரத்தின் பல்வேறு கிராமங்களில் உள்ள தோட்டங்களில் நேரடி விலையாக ஒரு இளநீர் ரூ.20ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய சூல்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாகி கொண்டிருப்பதால், வரும் நாட்களில் இளநீர் தேவையும் அதிகரித்து, பண்ணை நேரடி கொள்முதல் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என, தென்னை விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: