குருவாயூர் கோயிலில் முழு ஊரடங்குக்கு இணையான கட்டுப்பாட்டிலும் 145 திருமணம்

திருவனந்தபுரம்: கேரளாவில் முழு ஊரடங்குக்கு இணையான கட்டுப்பாடுகள் நேற்று விதிக்கப்பட்ட போதிலும் குருவாயூர் கோயிலில் 145 திருமணங்கள் நடந்தன. கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியபடி இருந்தது. இந்த நிலையில் நேற்றும் தொடர்ந்து 4வது நாளாக நோயாளிகள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்து உள்ளது. நேற்று 45,449 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. தொற்று சதவீம் 44.88 ஆகும்.  எர்ணாகுளம் மாவட்டத்தில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 11,091 ஆக உயர்ந்தது.

கேரளாவில் ஒரு மாவட்டத்தில் தினசரி நோயாளிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடப்பது இதுவே முதல்முறையாகும். இதனிடையே மாநிலத்தில் கொரோனா  பரவல் அதிகரித்ததை தொடர்ந்து நேற்று முழு  ஊரடங்குக்கு இணையான  கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. இதையடுத்து சாலைகள்  முழுவதும்  வெறிச்சோடின.  நீண்ட தூர  பஸ்கள் மட்டும் ஓரளவு ஓடின. ஆட்டோ, டாக்சி உள்பட பெரும்பாலான வாகனங்கள்  ஓடவில்லை. மாநிலம் முழுவதும் காய்கறி, இறைச்சி, மீன் உள்பட அத்தியாவசியக  கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன.

பொது மக்கள் வெளியே செல்லாமல்  வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர்.  திருமணம் மற்றும் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளுக்கு அதிகபட்சமாக  20 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.  கட்டுப்பாடுகளை மீறியதாக 262  பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 170 பேர் கைது செய்யப்பட்டனர்.  134 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன, இந்த நிலையில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோயிலில் நேற்று 162 திருமணங்கள் நடத்த முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. முழு ஊரடங்குக்கு இணையான கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால் ஒரு திருமணத்திற்கு அதிகபட்சமாக 10 பேரும், 2 போட்டோ கிராபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.  

அதன்படி நேற்று அதிகாலை 5 மணி முதல் கோயில் வளாகத்தில் உள்ள 2 மண்டபங்களில் திருமணங்கள் நடக்க தொடங்கின. சிறிது நேரத்தில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியதால் மேலும் ஒரு மண்டபத்தில் வைத்து திருமணங்கள் நடத்தப்பட்டன. அந்தவகையில் நேற்று மொத்தம் 145 திருமணங்கள் நடந்தன. மீதமுள்ள 17 திருமணங்கள் நடைபெறவில்லை.

Related Stories: