வனவிலங்குகளின் தாகம் தணிக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்-வனத்துறை நடவடிக்கை

கூடலூர் :  நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி 325 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ளது. கேரளா,கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மூன்று மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்த வனப்பகுதியில், யானைகள்,மான்கள்,காட்டு மாடுகள்,புலி,சிறுத்தை மற்றும் ஊர்வன, பறப்பன என ஏராளமான விலங்குகள் பறவைகள் காணப்படுகின்றன. முதுமலை வனப்பகுதியின் வழியாக ஓடும் மாயாறு வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்து வருகிறது.

இதேபோல் ஒம்பட்டா கேம் ஹட் ஆகிய இடங்களில் இரண்டு பெரிய தடுப்பணைகளும் ஆங்காங்கே சிறிய தடுப்பணைகளும் உள்ளன. சிறிய தடுப்பணைகளில் வறட்சி காலத்தில் தண்ணீர் முழுவதுமாக வறண்டு போய்விடும்.  தற்போது மழைக்காலம் முடிந்து பனிக்காலம் துவங்கியுள்ள நிலையில், கடும் பனி பகுதியில் வெப்பம் காரணமாக வனப்பகுதியில் உள்ள புல்வெளிகள் காய்ந்து வருகின்றன. மேலும் வெயிலின் தாக்கத்தால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி தொலைதூரம் அலைகின்ற சிரமத்தை கருத்தில் கொண்டு, வனப் பகுதிகளில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள செயற்கை தண்ணீர் தொட்டிகளில் ஒவ்வொரு ஆண்டிலும் வறட்சிக் காலங்களில் தண்ணீர் நிரப்பி வைக்கும் பணியை வனத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல் இந்த வருடமும் வனவிலங்குகளின் தண்ணீர் தேவைக்காக வனப்பகுதிகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியை வனத்துறையினர் தற்போது துவக்கி உள்ளனர்.முதல் கட்டமாக முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தண்ணீர் நிரப்பும் பணி துவங்கியுள்ளது. தலா ஆறயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள ஆறு தரைமட்ட நீர்தேக்க தொட்டிகளில் தற்போது தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.

சிறிய அளவிலான ஊர்வன முதல் பெரிய அளவிலான யானைகள் வரை  தண்ணீர் குடிப்பதற்கு வசதியாக இந்த தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தெப்பக்காடு வனச்சரகர் மனோஜ்குமார் மேற்பார்வையில் வனத்துறையினர் தண்ணீர் நிரப்பும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வறட்சி காலம் முழுவதும் இந்த தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெறும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: