பவானிசாகர் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டுயானைகள் விரட்டியடிப்பு

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இவை இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பசுவபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் முகாமிட்டன.

பகல் நேரங்களில் விவசாய தோட்டப் பகுதியில் யானைகள் முகாமிட்டதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் நேற்று டிராக்டர்கள் மற்றும் பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி தனியார் தோட்டத்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை  பட்டாசுகள் வெடித்தும், ஒலி எழுப்பியும்  சுமார் 2 மணி நேரம் போராடி அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

இதைத்தொடர்ந்து காட்டு யானைகள் வனப் பகுதிக்குள் சென்றன. வனப் பகுதிக்குள் சென்ற காட்டு யானைகள் மீண்டும் இப்பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களுக்குள் நுழைய வாய்ப்பு உள்ளதால் வனத்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: