முழு ஊரடங்கால் மாவட்டம் முழுவதும் சாலைகள் வெறிச்

திருவள்ளூர்: தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால்,  பொதுமக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு  ஊரடங்கை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில்  திருவள்ளூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நேற்று முழு ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ்  எஸ்பி வருண்குமார் உத்தரவின்பரில் 2 கூடுதல் எம்பிக்கள், 5 டிஎஸ்பிக்கள்,  11 இன்ஸ்பெக்டர்கள், 118 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு  சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 469 போலீசாரும், 213 ஊர்காவல் படையினர் என  மொத்தம் 700 பேர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனால் பொது  போக்குவரத்து சேவைகள் தடைசெய்யப்பட்டது. அதேபோல், பொதுமக்கள் அதிகம்  கூடும் இடங்களான காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், மார்க்கெட்டுகள்,  இறைச்சிக்கடைகள், மீன் சந்தைகள் அடைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே  அத்தியவாசிய தேவைகளான மருந்து கடைகள், பால் கடைகள், நாளிதழ் கடைகள்,  பெட்ரோல் நிலையங்கள் ஆகியவை செயல்படவும் அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த  ஊரடங்கால் திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி,  கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடைகள்  முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. இதனால் திருவள்ளூர் நகராட்சி பேருந்து  நிலையம், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, காக்களூர் - ஆவடி சாலை,  தேரடி, பஜார் வீதி, காய்கறி மார்க்கெட் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில்  பொதுமக்கள் நடமாட்டமின்றி அனைத்தும் வெறிச்சோடிய நிலையில் இருந்தது.

திருவள்ளூர்  நகரின் முக்கிய சாலைகளில் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள்  நாகலிங்கம், பத்மஸ்ரீ பபி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் போலீசார் வாகன  தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல்,  மாவட்டத்தில் உள்ள தமிழக - ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டை, திருத்தணி,  கனகம்மாசத்திரம், பென்னலூர்பேட்டை, பள்ளிப்பட்டு, கும்மிடிப்பூண்டி உள்பட 8  இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்புப் பணியில்  ஈடுபட்டனர். அப்போது, அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வருவோர்களின்  வாகனங்களை போலீசார் சோதனைக்கு பின் அனுப்பி வைக்கவும் நடவடிக்கை  எடுக்கப்பட்டது. இதில் தேவையின்றி வந்த வாகனங்கள் சாலையில் தடுத்து  நிறுத்தி அப்படியே எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

மேலும்  முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிந்ததாக வழக்குகளும், சமூக இடைவெளியை  கடைபிடிக்காமல் விதியை மீறியதாக  வழக்குகளும் என  வாக்குகள் பதிவு  செய்யப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை: கொரோனா வைரஸ் மற்றும் ஓமிக்ரான் தொற்று  அச்சுறுத்தல் காரணமாக அண்டை மாநிலங்களான ஆந்திரா பகுதியில் இருந்து வரும் வாகனங்களை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என்றும், இதையொட்டி நேற்று  23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்தது. இதனால், நேற்று 3வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை வழி தடத்தில் சென்னைக்கு செல்லும் வாகனங்களை ஊத்துக்கோட்டை டிஎஸ்பி.சாரதி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் குமார் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

மேலும் பால், காய்கறி வாகங்கள், ஆம்புலன்ஸ் ஆகிய வாகனங்களை தவிர மற்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி திருப்பி விட்டனர். இந்நிலையில், ஊரடங்கு பிறப்பித்ததால் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு செல்லும் சரக்கு வாகனங்களை தவிர மற்ற கனரக வாகனங்களையும், சுற்றுலா வாகனங்களையும் ஊத்துக்கோட்டை தமிழக - ஆந்திர எல்லையில் காவல் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

Related Stories: