திருப்பதியில் 10 நாட்களுக்கு பிறகு ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் மூடல்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 13ம் தேதி திறக்கப்பட்ட சொர்க்க வாசல் நேற்றிரவு மூடப்பட்டது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள், இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 13ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அன்றைய தினம் முதல் 22ம் தேதி வரை(நேற்று) சொர்க்கவாசல் வழியாக சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, இந்த மாதம் சுவாமி தரிசனத்திற்கான டிக்கெட்டும் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. ஆன்லைனில் டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வந்தனர். கோயிலில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் இரவு வரை 39,440 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 13,692 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் ₹2.53 கோடியை காணிக்கையாக செலுத்தினர்.இந்நிலையில், வைகுண்ட ஏகாதசி தரிசனத்தின் கடைசி நாளான நேற்று இரவு வரை சொர்க்கவாசல் திறந்து இருந்தது. பின்னர், சொர்க்கவாசல் கதவுகள் மூடப்பட்டது. இதோடு, அடுத்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியின்போது தான் சொர்க்கவாசல் திறக்கப்படும்.

Related Stories: