ரத்ததான ஊர்தியில் இந்தி வாசகம் அகற்றம்

புதுச்சேரி : புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் கீழ் நடமாடும் ரத்ததான ஊர்தி உள்ளது. இந்த ஊர்தி புதுப்பிப்பு பணிக்காக ஹைதராபாத் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஊர்தி புதுப்பிக்கப்பட்டு மீண்டும் புதுச்சேரி திரும்பியது. ஏற்கனவே ஊர்தியின் ஒரு பக்கத்தில் `ரத்த தானம், உயிர் தானம்’ என்று தமிழிலும், மற்றொரு பக்கம் அதே வாசகம் ஆங்கிலத்தில் இருந்தது. ஊர்தி புதுப்பிக்கப்பட்ட பிறகு தமிழில் இருந்த வாசகங்கள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக இந்தியில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

மேலும், தேசிய ரத்த மாற்றுக்கழகம் என்ற பெயர் கூட ஆங்கிலம் மற்றும் இந்தியில் அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு உயிர் துளி அமைப்பு உள்ளிட்ட பல சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை இயக்குநர் ராமுலுவிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தியில் எழுதப்பட்ட வாசகத்தை அழித்துவிட்டு மீண்டும் தமிழில் வாசகங்கள் எழுத அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், நேற்று ரத்ததான ஊர்தியில் இருந்த இந்தி வாசகங்கள் முழுவதும் அகற்றப்பட்டு, அந்த இடங்களில்  ரத்த தானம், உயிர் தானம் மற்றும் தேசிய ரத்த மாற்றுக்கழகம் ஆகிய வாசகங்கள் மீண்டும் எழுத்தப்பட்டன.

Related Stories: