உடல்நிலை பாதிக்கப்பட்ட ஊழியருக்கு விடுமுறை வழங்க மறுக்கும் அதிகாரிகள்-வில்லியனூர் தீயணைப்பு நிலையத்தில் அவலம்

வில்லியனூர் : வில்லியனூர் தீயணைப்பு நிலையத்திற்கு தனி இடம் இல்லாததால், தற்போது அரசு மாணவர் விடுதியில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 18 வீரர்கள் பணிபுரிந்த நிலையில் தற்போது நிலைய அதிகாரி உள்ளிட்ட 14 வீரர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இதில் 3 ஓட்டுநர்களில் ஒருவர் பணி ஓய்வு பெற்று சென்றுவிட்டதால் தற்போது 2 ஓட்டுநர்கள் மட்டும் பணியில் உள்ளனர். இந்நிலையில் ஓட்டுநர் வீரப்பன் கடந்த 3 மாதமாக தொடர்ச்சியாக வேலை செய்து வருகிறார். தற்போது அவருக்கு நீரிழிவு நோய் அதிகரித்து அடிக்கடி மயக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து பல்வலி இருந்து வந்துள்ளதால் இரண்டு நாட்கள் விடுப்பு வேண்டும் என்று கடிதம் கொடுத்துள்ளார்.

ஆனால் நிலைய அதிகாரி மற்றும் கோட்ட தீயணைப்பு அதிகாரி ஆகியோர் வீரப்பனுக்கு விடுமுறை அளிக்க மறுத்துவிட்டனர். அவர் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று மருந்து வாங்கி சாப்பிட்டுவிட்டு பணி செய்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் ஏற்படவே அவர் விடுமுறை  வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். ஆனால் விடுப்பு தருவதாக கூறி பணிக்கு வர வைத்து இரவு மற்றும் தொடர்ந்து பகல் நேரப்பணி செய்யுமாறு வற்புறுத்தியுள்ளனர். இருப்பினும் அவர் பணிக்கு வந்தும் நிலைய அதிகாரி அவருக்கு வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் போட்டுள்ளனர். இந்நிலையில் ஓட்டுநர் வீரப்பன் உடல்நிலை சரியில்லாமல் தீயணைப்பு நிலையத்திலே படுத்துக்கிடக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, நான் 21 ஆண்டுகளாக தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு சர்க்கரை வியாதி உள்ளது.  கடந்த சில நாட்களாக அதனுடன் பல்வலி மற்றும் காய்ச்சல் இருந்து வருகிறது. என் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் எனக்கு விடுப்பு வேண்டும் என்று கேட்டதற்கு விடுப்பு கொடுக்க மறுத்துவிட்டனர். ஆனால் மற்றொரு  ஓட்டுநருக்கு விடுப்பு கொடுத்துள்ளனர். எனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியும் மருத்துவ விடுமுறை அளிக்காமல் பணிக்கு வரக்கூறி வற்புறுத்தி வருகின்றனர். வாகனத்தை ஓட்டும்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் என்னுடன் வரும் வீரர்களின் உயிர்களுக்கு யார் பாதுகாப்பு அளிப்பது?

தற்போது பணிக்கு வரசொல்லி வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் போட்டுள்ளனர். இதனால் நான் கடும் மனஉளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளேன். எனக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நிலைய அதிகாரி மற்றும் கோட்ட தீயணைப்பு அதிகாரி ஆகியோர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: