வெற்றியை நிர்ணயிக்கப் போகும் முஸ்லிம் ஓட்டுகள் பாஜ.வுக்கு ரெண்டுல கண்டம்: சமாஜ்வாடி, காங்கிரசுக்கு அமோக ஆதரவு

அடுத்த மாதம் நடக்க உள்ள 5 மாநில தேர்தல் அதிக கவனத்தை ஈர்த்திருக்கும் மாநிலம் உத்தரப் பிரதேசம். 403 தொகுதிகளை கொண்ட உபியில் மீண்டும் பாஜ ஆட்சியை தக்க வைக்குமா? இழந்த ஆட்சியை சமாஜ்வாடி மீட்டெடுக்குமா? தேசிய அளவில் காங்கிரஸ் தனது பலத்தை நிரூபிக்குமா? என பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன. இதோடு, உபியில் முஸ்லிம்கள், தலித்களின் ஓட்டுக்களை எந்த கட்சி பெறப் போகிறது என்பதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.ஏழு கட்டமாக நடக்க உள்ள உபி தேர்தலில் 2ம் கட்டத்தில் நடக்கும் 55 தொகுதிகள் பெரும்பாலும் முஸ்லிம்கள் வாக்கு பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளாகும். இந்த 55 தொகுதிகள் தான் பாஜ.வுக்கு பெரிதும் சவாலான தொகுதிகளாக கருதப்படுகின்றன.

சஹாரன்பூர், பிஜ்னோர், அம்ரோஹா, சம்பல், மொராதாபாத், ராம்பூர், பரேலி, ஷாஜஹான்பூர் போன்ற மாவட்டங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. கடந்த 2017ல் இங்குள்ள 55 தொகுதியில் பாஜ 38 இடங்களிலும், சமாஜ்வாடி 15 இடத்திலும், காங்கிரஸ் 2 இடத்திலும் வெற்றி பெற்றன. அப்போது சமாஜ்வாடி, காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. சமாஜ்வாடியில் வெற்றி பெற்ற 15ல் 10 பேர் முஸ்லிம் வேட்பாளர்கள்.கடந்த முறை பாஜவை நம்பி வாக்களித்த முஸ்லிம்கள் இம்முறை அதற்கு தயாராக இல்லை என்பதை வெளிப்படையாக கூறி உள்ளனர். யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சியில் உபியில் சிறுபான்மையினர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்திருப்பதால், இத்தேஹாத்-இ-மில்லத் கவுன்சிலின் தலைவரும், பரேல்வி முஸ்லிம்களின் மத குருவுமான மவுலானா தவுகிர் ரசா கான், தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு தங்கள் ஆதரவு என அறிவித்துள்ளார். அதிக முஸ்லிம் மக்களை மனதில் வைத்து, ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசியும் இப்பகுதியில் உள்ள சில இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, முஸ்லிம், தலித் வேட்பாளர்களை களமிறக்க உள்ளது.

சமாஜ்வாடி முஸ்லிம் வேட்பாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் தர உள்ளது. மேலும், சமீபத்தில் அமைச்சர் பதவியை தூக்கி எறிந்து சமாஜ்வாடியில் இணைந்த சுவாமி பிரசாத் மவுர்யா, தரம்சிங் சைனி ஆகியோரின் வரவும் இத்தொகுதிகளில் சமாஜ்வாடியின் பலத்தை அதிகரித்துள்ளது. எனவே, 7 கட்டத்தில் 2ம் கட்ட தேர்தல் பாஜ.வுக்கு மிகப்பெரிய கண்டமாக கருதப்படுகிறது. இது குறித்து உத்தரப்பிரதேச பாஜ துணைத் தலைவர் விஜய் பகதூர் பதக் கூறுகையில், ‘‘ஒன்றியத்திலும் மாநிலத்திலும் பாஜ அரசு அமைந்ததில் இருந்து சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் வளர்ச்சி அடைந்துள்ளனர். இதை அனைவரும் தெளிவாக உணர்ந்துள்ளனர். எனவே, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரசுக்கு மக்கள் வாய்ப்பளிக்க மாட்டார்கள். மேலும், இவர்கள் தனித்தனியாக போட்டியிடுவதால் வாக்குகள் சிதறும், அதுவும் பாஜவுக்கு நன்மையாகவே முடியும்,’’ என்றார்.

பிபின்ராவத் சகோதரர் பாஜவில் இணைந்தார்

* குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் சகோதரர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி விஜய் ராவத் நேற்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தமியை சந்தித்து பாஜவில் இணைந்தார்.

* உபியில் பாஜவுடன் அப்னா தளம், நிஷாத் பரிஷத் கூட்டணி உறுதியாகி உள்ளதாக அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா நேற்று அறிவித்தார். இக்கட்சிகள் மத்தியிலும் பாஜ கூட்டணியில் உள்ளன.

* சமாஜ்வாடி எம்எல்ஏ சரத்வீர் சிங் நேற்று பதவியை ராஜினாமா செய்தார். வரும் தேர்தலில் பாஜவின் வெற்றிக்காக உழைக்கப் போவதாக அவர் கூறி உள்ளார்.

நொய்டா சாபம்

உபி.யின் மேற்கில், டெல்லிக்கு அருகாமையில் அமைந்துள்ள வர்த்தக நகரமான நொய்டாவுக்கு உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று சென்றார். அங்கு கவுதம் புத்தா நகரில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த அவர் கூறுகையில், ‘‘நொய்டா வந்தால் முதல்வர் பதவிக்கே ஆபத்தாகிவிடும் என மாயாவதியும், அகிலேஷீம் நம்புகின்றனர். அதனால்தான் அவர்கள் நொய்டாவை ஒட்டு மொத்தமாக புறக்கணித்தனர். ஒரு முதல்வராக நொய்டாவின் வளர்ச்சி எனக்கு முக்கியமானது,’’ என்றார். கடந்த 2012 தேர்தலில் மாயாவதி கவுதம் புத்தா நகருக்கு வந்த பின் அவரது கட்சி தோல்வி அடைந்தது. இதற்கு முன்பும் பல தலைவர்கள் இங்கு வந்து திரும்பிய பிறகு பதவியை இழந்துள்ளனர். எனவே, இந்த நகரத்துக்கு வந்து செல்வதை சாபமாகவே கருதப்படுகிறது. அகிலேஷ் முதல்வராக இருந்த 2012 முதல் 2017 வரை நொய்டா பக்கமே வந்ததில்லை.

Related Stories: