கோவை அருகே குடோனில் பதுங்கல்: வனத்துறையின் கூண்டில் சிக்காமல் 3வது நாளாக தவிக்கவிடும் சிறுத்தை

கோவை: கோவை பி.கே.புதூர் பகுதியில் உள்ள தனியார் குடோனில் பதுங்கியுள்ள சிறுத்தை வனத்துறை கூண்டில் சிக்காமல் 3வது நாளாக போக்கு காட்டி வருகிறது. கோவை மதுக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை ஒன்று ஊருக்குள் புகுந்து கோழி, நாய் ஆகியவற்றை வேட்டையாடி அட்டகாசம் செய்து வந்தது. அந்த சிறுத்தையை பிடிக்கவேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து வனத்துறையினர் கூண்டுவைத்தபோது சிறுத்தை சிக்கவில்லை. இந்த நிலையில், நேற்று முன்தினம் குனியமுத்தூர் அடுத்த பி.கே.புதூர் பகுதியில் உள்ள தனியார் குடோனில் சிறுத்தை பதுங்கியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் குடோனில் பதுங்கியிருந்த சிறுத்தை வெளியில் தப்பி செல்லாமல் இருக்க குடோன் முழுவதும் வலையால் மூடினர். குடோனின் இரண்டு நுழைவு வாயிலிலும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து கறி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், சிறுத்தை கறியை சாப்பிட கூண்டிற்குள் வரவில்லை. சிறுத்தையை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் சிறுத்தை சிக்காத நிலையில், நேற்று 2வது நாளாக வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

சிறுத்தை குடோனில் உள்ள ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு சென்றது. இது தொடர்பான வனத்துறையினர் வெளியிட்ட வீடியோ சமூகவலை தளங்களில் வைரலானது. இந்த நிலையில், பாழடைந்த குடோனில் சிறுத்தை பதுங்கியுள்ளதால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் திட்டம் இல்லை எனவும், தானாக கூண்டில் சிறுத்தை சிக்கும் வரை காத்திருக்க முடிவு செய்துள்ளதாகவும் கோவை மண்டல கூடுதல் முதன்மை வனபாதுகாவலர் ராமசுப்பிரமணியம் தெரிவித்தார்.

இதனிடையே குடோனில் பதுங்கியிருந்த சிறுத்தை இன்று அதிகாலை குடோனை விட்டு வெளிவே வந்து நடமாடும் வீடியோ அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோவை வனத்துறையினர் வெளியிட்டு அது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. வனத்துறை வைத்த கூண்டில் சிக்காமல் இன்று 3வது நாளாக போக்கு காட்டி வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர்.

Related Stories: