கணக்குனா... கணக்குதான்... டிஜிட்டல் பிரசார செலவை வேட்பாளர் கூற தனி பகுதி: விண்ணப்பத்தில் அதிரடி மாற்றம்

புதுடெல்லி: டிஜிட்டல் பிரசாரத்துக்காக செய்யப்படும் செலவு கணக்கை காட்டுவதற்கு, தேர்தல் செலவு கணக்கு விண்ணப்பத்தில் தேர்தல் ஆணையம் புதிய பகுதியை சேர்த்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் உருமாறிய ஒமிக்ரான் தொற்று அதி தீவிரமாக பரவி வருகிறது. இதனால், தற்போது நடைபெற இருக்கும் உபி., உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல்களில் கொரோனா விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற தலைமைத் தேர்தல் ஆணையம் ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி உள்ளது. இதனையொட்டி, இந்த 5 மாநிலங்களிலும் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், பிரசாரம், பேரணி, ஊர்வலங்களுக்கு வரும் 22ம் தேதி வரை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதனால் வேட்பாளர்கள் டிஜிட்டல், ஆன்லைன் மூலம் வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். இதற்கு முந்தைய தேர்தல்களிலும் வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் செலவு கணக்கில், டிஜிட்டல் பிரசாரத்துக்கு செலவிடும் தொகையை குறிப்பிடுவது வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில், வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கில் டிஜிட்டல் பிரசாரத்துக்கான செலவுகளை குறிப்பிட, அதற்கான விண்ணப்பத்தில் முதல் முறையாக தனி பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி, டிவி, சமூக வலைதளங்கள், டிஜிட்டல் பிரசார வேன் போன்வற்றுக்கு செலவிடும் தொகையை, புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இந்த பகுதியில் தெரிவிக்கும்படி வேட்பாளர்களுக்கு கூறப்பட்டுள்ளது.

Related Stories: