பொங்கல் கொண்டாட சொந்த ஊர் சென்றவரின் வீட்டு பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் கொள்ளை: 2 பேருக்கு வலை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கீழ்நல்லாத்தூர் ஊராட்சி, பல்லவன் திருநகரை சேர்ந்தவர் ராஜேஷ் (37). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 14ம் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்தினருடன் செங்கல்பட்டில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அங்கிருந்து, இவரது மனைவி மற்றும் மாமனார், மாமியார் நேற்று வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ லாக்கரை உடைத்து, அதில் இருந்த பணத்தை 2 மர்ம நபர்கள் திருடிக் கொண்டிருந்தனர். இதைக்கண்ட ராஜேஷின் மனைவி ரேவதி மற்றும் அவரது மாமனார், மாமியார் ஆகியோர் திருடன்... திருடன்... என கூச்சலிட்டபடி அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் கொள்ளையர்கள் அவர்களை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றனர்.

அவர்களில் ஒருவர் கட்டியிருந்த லுங்கியை பிடித்து இழுத்தபோது அது அவிழ்த்து கீழே விழுந்தது. ஆனால், இங்கே நின்றால் சிக்கி விடுவோம் என பயந்த அந்த கொள்ளையன் தனது லுங்கியையும் பொருட்படுத்தாமல் உள்ளாடையுடன் வெளியே வந்து தயாராக இருந்த பைக்கில் தப்பினார். இதையடுத்து பீரோவில் சென்று பார்த்தபோது, அதில் வைத்திருந்த ரூ.5 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதுகுறித்து மணவாளநகர் போலீசில் ராஜேஷ் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, தப்பிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதேபோல், கவரப்பேட்டை, உத்தரகுளம் பகுதியை சேர்ந்த  மோகன் (41) என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து 5 சவரன் நகை, ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

Related Stories: