திருந்தும் இளைஞர்களை சுட்டு கொல்லும் பாக். தீவிரவாதிகள்

*ராணுவம் திடுக்கிடும் தகவல்

ஸ்ரீ நகர் :  பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள், நம் நாட்டின் இளைஞர்களை மூளை சலவை செய்து தங்களுடைய அமைப்பில் சேர்த்து, தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்துகின்றனர். ஒரு கட்டத்தில் இது தவறு என உணர்ந்து திருந்தும் இளைஞர்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஈவு இரக்கமின்றி சுட்டு கொல்லும் சம்பவம் அம்பலமாகி இருக்கிறது.

இது குறித்து காஷ்மீரின் மூத்த ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:  காஷ்மீரில் சில நாட்களுக்கு முன் பத்காம் என்ற இடத்தில் 3 தீவிரவாதிகளை ராணுவ வீரர்கள் முற்றுகையிட்டனர். அப்போது நடந்த சண்டையில் 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இதில், ஒருவன் ஸ்ரீநகரை சேர்ந்த வாலிபர் வாசிம் காதிர் மீர். மற்ற 2 பேரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். பிரேத பரிசோதனையின் போதுதான் வாசிமை அவனுடன் இருந்த தீவிரவாதிகளே சுட்டு கொன்றுள்ள அதிர்ச்சி  தகவல் தெரிந்தது.

சண்டையின் போது தீவிரவாதிகள் சரணடைய வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது, வாசிம் தனது ஆயுதத்தை கைவிட்டு சரணடைய நினைத்து, வெளியே வர முயன்றுள்ளான். மற்ற தீவிரவாதிகளிடமும் சரணடைந்து விடலாம் என கூறியுள்ளான். ஆனால், சண்டையிடும்படி அவனுக்கு மற்ற தீவிரவாதிகள் உத்தரவிட்டுள்ளனர். வாசிம் அதற்கு உடன்பட மறுக்கவே, அவர்களே அவனை சுட்டு கொன்றுள்ளனர். இதுபோல், திருந்தி வாழ நினைக்கும் காஷ்மீர் இளைஞர்களை, பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொன்றுள்ளனர் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. இவ்வாறு  கூறினர்.

Related Stories: