காட்டுத் தீயாய் பரவும் கொரோனா 15 நாளில் 1200 சதவீதம் அதிகரிப்பு : தினசரி தொற்று 3 லட்சம் நெருங்கியது

புதுடெல்லி : இந்தியாவில் கடந்த 15 நாளில் தினசரி கொரோனா தொற்று 1200 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது தினசரி தொற்று எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கி உள்ளது. இந்தியாவில் கடந்த மாத இறுதியில் ஒமிக்ரான் புதுவகை வைரசால் கொரோனா 3ம் அலை ஏற்பட்டது. கடந்த 2 அலையை காட்டிலும் தற்போது தொற்று பரவல் படுவேகமாக இருந்து வருகிறது.

கடந்த 1ம் தேதி தினசரி தொற்று 22,775 ஆக இருந்த நிலையில் ஒரே வாரத்தில் ஒரு லட்சத்தை தாண்டியது. அதாவது, ஜனவரி 7ம் தேதி தினசரி தொற்று ஒரு லட்சத்து 17 ஆயிரமாக பதிவானது. இது, 2 வாரத்தில் அதாவது 15 நாளில் 1200 சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 2 லட்சத்து 71 ஆயிரத்து 202 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், மொத்த பாதிப்பு 3 கோடியே 71 லட்சத்து 22 ஆயிரத்து 164 ஆக உயர்ந்துள்ளது.  இதே போல், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15 லட்சத்து 50 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது. இது, 225 நாட்களில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 557 பேர் அதிகரித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 314 பேர் பலியாகி உள்ளனர்.

ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை 7,743 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,702 பேர் குணமடைந்துள்ளனர். இதே வேகத்தில் தொற்று அதிகரித்தால் இம்மாத இறுதியில் தினசரி தொற்று 5 லட்சமாக அதிகரிக்க வாய்ப்புண்டு.  கடந்தாண்டு மே 7ம் தேதி, 2ம் அலையின் போது 4 லட்சத்து 14 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதே இந்தியாவில் அதிகபட்ச ஒருநாள் பாதிப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: