போலீசாரை சுட்டு தப்பிக்க முயன்ற சி.டி. மணிக்கு 15 நாள் நீதிமன்ற காவல்: மருத்துவமனையில் நேரில் சென்று விசாரணை; அதிமுக விஐபிக்களுடன் நெருங்கிய தொடர்பு அம்பலம்

சென்னை: பிரபல ரவடி சி.டி. மணி, அதிமுக விஐபிக்கள் ஆதரவுடன் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்தநிலையில், சி.டி.மணியை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். சென்னை தேனாம்பேட்டை சேர்ந்தவர் சி.டி. மணி என்கின்ற மணிகண்டன்(38). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆட்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என  30க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. அரசியல் கட்சி பிரமுகர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு சி.டி. மணி தமிழகம் முழுவதும் ரவுடி சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தினார். இவர் தனக்கு எதிரான ஒரு ரவுடியை தீர்த்துக் கட்டுவதற்கு சதித்திட்டம் தீட்டியதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் சி.டி. மணியின் நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதையடுத்து, போரூர் அருகே, சி.டி. மணி காரில் வந்து கொண்டிருப்பதாக தகவலையடுத்து வளசரவாக்கம் உதவி கமிஷனர் மகிமை வீரன் தலைமையில் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது போரூர் மேம்பாலம் அருகே வந்த சொகுசு காரை மடக்கி பிடித்தனர். ஆனால் காரில் இருந்து சி.டி. மணி போலீசாரை கண்டதும் காருக்குள் இருந்தபடியே துப்பாக்கியால் சுட்டார். இதில், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் கையில் குண்டு பாய்ந்தது. இதனால் அவருக்கு மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து சி.டி, மணி அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்தார். அப்போது அவர் தப்பி ஓட முயற்சித்த போது, கீழே விழுந்ததில் கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது இதையடுத்து காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சி.டி. மணி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, சி.டி. மணி மீது, துப்பாக்கி முதலான பயங்கர ஆயுதங்கள் வைத்திருத்தல், கொலை முயற்சி ஆகிய 2 பிரிவுகளில் வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சி.டி. மணி சிகிச்சை பெற்று வருவதால், நீதிபதியிடம் நேரில் அழைத்து வந்து ஆஜர்படுத்துவதிலல் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி  ஸ்டாலின்,  மருத்துவமனைக்கு நேரில் சென்று சி.டி. மணியிடம் விசாரணை செய்தார். பின்னர் அவரை ஜூன் 17-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். சிகிச்சைக்குப் பிறகு அவரை சிறையில் அடைப்பதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் சி.டி. மணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர் அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் மாவட்டச் செயலாளராகவும் உள்ளவருடன் சேர்ந்து பல்வேறு கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆள் கடத்தலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். போலீசில் யாராவது புகார் செய்தால், அந்த புகார் எம்எல்ஏவாக இருந்தவர் மூலம் ரவுடியின் கைக்கே மனு வந்து சேர்ந்து விடும் அளவில் இருந்தான். மேலும், இளைஞர் அணியில் முன்னாள் மாவட்டச் செயலாளராக இருந்தவர்தான் சி.டி. மணிக்கு சொகுசு கார் வாங்கிக் கொடுத்துள்ளார். தென் சென்னையில் நட்சத்திர ஓட்டல்களில் நடந்த நிகழ்ச்சிகளில் எம்எல்ஏவுடன் ரவுடியும் கலந்து கொண்டுள்ளான் என்று விசாரணையில் தெரியவந்தது. மாவட்டச் செயலாளராக இருப்பவர், தனது அரசியல் எதிரிகள் மற்றும் கட்சியில் உள்ள போட்டியாளர்களை சி.டி. மணியை வைத்து மிரட்டுவது, கடத்திச் சென்று தாக்குவது போன்றவற்றிலும் ஈடுபட்டு வந்துள்ளான். இதனால் மாவட்டச் செயலாளரை எதிர்த்த பலர் கட்சியை விட்டு ஒதுங்கியுள்ளதும் தெரியவந்துள்ளது. தற்போது அவர்கள் போலீசில் புகார் செய்யவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், சி.டி. மணியை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்….

The post போலீசாரை சுட்டு தப்பிக்க முயன்ற சி.டி. மணிக்கு 15 நாள் நீதிமன்ற காவல்: மருத்துவமனையில் நேரில் சென்று விசாரணை; அதிமுக விஐபிக்களுடன் நெருங்கிய தொடர்பு அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: