புதுகையில் 13.75 கிலோ நகை மாயமான வழக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை பஞ்சாப் நேசனல் வங்கியில் 13.75 கிலோ தங்க நகைகள் மாயமான வழக்கு தொடர்பாக சிபிஜ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். புதுக்கோட்டை தெற்கு ராஜ வீதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது. இந்த வங்கியில் திருக்கட்டளையை சேர்ந்த மாரிமுத்து (40) என்பவர் கடந்த 2006 முதல் 2019 வரை 13 ஆண்டாக அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019 ஏப்ரல் 25ம் தேதி மாரிமுத்து திடீர் மாயமானார். அவர், மாயமான 2 நாளில் திருவரங்குளம் அருகே உள்ள வல்லநாடு காட்டு பகுதியில் அவரது கார் எரிந்த நிலையில் அதில் இருந்த கவரிங் நகைகள் மற்றும் ஹார்ட் டிஸ்க் கண்டெடுக்கப்பட்டது.

இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், வங்கியில் சோதனை செய்ததில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 13.75 கிலோ தங்க நகைகள் காணாமல் போயிருந்ததும், அதே நேரத்தில் வங்கியில் சிசிடிவி கேமரா ஹார்ட் டிஸ்க் மாயமானதும் தெரியவந்தது. இதுதொடர்பாக வங்கி நிர்வாகம் சார்பில் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாரிமுத்துவை தேடி வந்த நிலையில், 2019 மே 1ம் தேதி கோடியக்கரை கடற்கரை பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது. அது மாரிமுத்து என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வங்கியில் மாயமான நகைகளை காப்பீடு மூலம் வாடிக்கையாளர்களுக்கு வங்கி நிர்வாகம் வழங்கியது. நகைகள் மாயமான போது அந்த வங்கியில் பணிபுரிந்த வங்கி மேலாளர் உள்ளிட்ட சிலரை வங்கி நிர்வாகம் பணியிடை மாற்றமும் செய்தது. வங்கியில் மாயமான நகைகள் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் அடகு கடைகள், பைனான்ஸ் நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த வழக்கு கடந்த 2020ம் ஆண்டு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கடந்த மார்ச் 20ம் தேதி சிபிஐ எஸ்பி கலைமணி தலைமையிலான அதிகாரிகள் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 3 முறை விசாரணை செய்த அதிகாரிகள், தற்போதுள்ள வங்கி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியதோடு, கணினியில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தனர். இந்நிலையில் மதுரையிலிருந்து எஸ்பி கணேசன் தலைமையில் 17 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் 8 கார்களில் நேற்று காலை 9மணியளவில் புதுக்கோட்டை வந்தனர். பின்னர் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு வந்த அதிகாரிகள், இதுதொடர்பாக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இவர்களுக்கு பாதுகாப்பாக புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் இருந்து 7 பெண் காவலர்கள் வந்து இருந்தனர். தொடர்ந்து புதுக்கோட்டை வடக்கு 4ம்வீதியில் உள்ள வங்கி பெண் அலுவலர் வீட்டிற்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.

The post புதுகையில் 13.75 கிலோ நகை மாயமான வழக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: