திருப்பூரில் ஆதார் அட்டை இல்லாமல் தவித்த 93 வயது முதியவருக்கு கொரோனா தடுப்பூசி: டிஜிபி சைலேந்திரபாபு ஏற்பாடு

திருப்பூர்: கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (93). இவருக்கு  மனைவி மற்றும் 4 மகன்கள் உள்ளனர். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு  குடும்பத்தை பிரிந்து திருப்பூருக்கு வந்தார். வயது முதிர்வால், வேலைக்கு செல்லமுடியாமல் சாலை ஓரத்தில் வசித்து வருகிறார். கொரோனா தடுப்பூசி குறித்து அறிந்ததும் தானும் தடுப்பூசி செலுத்த முயன்றார். ஆனால், அவரிடம் ஆதார், வாக்காளர் அட்டை என எதுவும் இல்லை. இதனால், தடுப்பூசி செலுத்தமுடியாமல் பலமுறை ஏமாற்றத்துடன் திரும்பி வந்தார்.

இது குறித்து அப்பகுதி மக்கள் தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு சமூக வலைதளங்கள் மூலம் தகவல்  தெரிவித்தனர். இதை அறிந்த அவர், திருப்பூர் போலீஸ் கமிஷனரை தொடர்பு கொண்டு குறிப்பிட்ட முதியவரை கண்டுபிடித்து கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன்பேரில், திருப்பூர் தெற்கு போலீசார் அவரை, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு  அழைத்து சென்று, கொரோனா முதல் தவணை தடுப்பூசி போட வைத்தனர்.

Related Stories: