திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது: கோயிலில் மூலிகை கலவை தெளிப்பு

திருமலை:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் தெலுங்கு வருடப்பிறப்பு (உகாதி), ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும் செவ்வாய்க் கிழமையில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் (தூய்மைப்பணி) நடத்தப்படுவது வழக்கம். அதன்படி வரும் நாளை வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. 22ம் தேதி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதையொட்டி செவ்வாய்க்கிழமையான நேற்று கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை நடந்தது.

அப்போது மூலவர் மீது பட்டு துணியால் மூடப்பட்டு அனைத்து இடங்களும் தூய்மைப்படுத்தப்பட்டது. பின்னர், பச்சைக்கற்பூரம், திருச்சூரணம், மஞ்சள், கிச்சலிகட்டை உட்பட பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. காலை 11 மணிக்கு பிறகு வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு அறை ஒதுக்கீடு நிறுத்தம்: கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி கூறுகையில், ‘‘திருப்பதியில் இன்று (நேற்று) முதல் பக்தர்களுக்கு அறைகள் ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசிக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் அறைகள் வழங்குவதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசியையொட்டி நாளை மறுதினம் (நாளை) காலை 9 மணிக்கு தங்க ரதத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத மலையப்ப சுவாமி  எழுந்தருள உள்ளார். இதற்காக, இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட 200 தேவஸ்தான பெண் பணியாளர்களை தேர்ந்தெடுத்து, அவர்கள் மூலம் தங்கரதம் வடம் பிடித்து இழுக்கப்பட்டு, நான்கு மாட வீதிகளில் சுவாமி வலம் வருவார்,’’ என்றார்.

Related Stories: