சண்டிகர் மேயர் பதவியை ஒரு ஓட்டில் பறித்தது பாஜ

சண்டிகர்: சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் மேயர் பதவியை பாஜ.விடம் ஆம் ஆத்மி  பறி கொடுத்தது. பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் நடந்த மாநகராட்சி தேர்தலின் முடிவு, கடந்த மாதம் 27ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், மொத்தமுள்ள 35 இடங்களில் ஆம் ஆத்மி 14, பாஜ 12, காங்கிரஸ் 8, அகாலிதளம் ஒரு இடங்களில் வெற்றி பெற்றன. இந்த 35 கவுன்சிலர்களுடன் சேர்த்து சண்டிகர் எம்பி.க்கும், உத்தியோகபூர்வ உறுப்பினர் என்ற முறையில் மேயர் பதவி தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளது.

இந்நிலையில், மேயர் பதவிக்கு நேற்று நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 36 உறுப்பினர்களில் 28 பேர் மட்டுமே வாக்களித்தனர். காங்கிரசின் 7, சிரோன்மணி அகாலி தளத்தின் ஒரு உறுப்பினர் வாக்களிக்கவில்லை. இதிலும் கூட, ஒருவரின் ஓட்டு செல்லாததாகி விட்டது.இதில், பாஜ.வின் வேட்பாளர் சரப்ஜித் கவுர் 14 ஓட்டுகளும், ஆம் ஆத்மியின் வேட்பாளர் அன்ஜு கத்யால் 13 ஓட்டுகளும் பெற்றனர். இதனால், பாஜ வேட்பாளர் வெற்றி பெற்றார். ஒரு ஓட்டு வித்தியாசத்தில் மேயர் பதவியை ஆம் ஆத்மி பறி கொடுத்தது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், ஆம் ஆத்மி உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் வெளியேற்றினர்.

Related Stories: