பொது சிவில் சட்டம்தான் ஒரே வழி தனிநபர் சட்டங்களால் நாட்டுக்கு அவமானம்: உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: ‘தனிநபர் சட்டங்களால் நாட்டின் ஒற்றுமைக்கு அவமானம். பொது சிவில் சட்டத்தினால் மட்டுமே தேசத்தின் ஒற்றுமையை பாதுகாக்க முடியும்,’ என டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.  இந்தியாவில் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என பாஜ தனது தேர்தல் அறிக்கையில் தவறாமல் கூறி வருகிறது.  டெல்லியை சேர்ந்த பாஜ மூத்த தலைவர்அஸ்வினி குமார் உபாத்யாய். இவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தேச ஒற்றுமையை பாதுகாக்கவும், பாலின ரீதியாக பெண்களின் கவுரவத்தை பாதுகாக்கவும்,  அவர்களுக்கு நியாயம் மற்றும் நீதி கிடைக்கவும், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 44ல் கூறப்பட்டுள்ளபடி நாடு முழுவதும் எல்லா மக்களுக்கும் பொருந்தக் கூடிய பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்,’ என கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும்படி ஒன்றிய அரசுக்கு கடந்த 2019ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல், நாட்டில் உடனடியாக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிடும்படி கோரி, மேலும் 4 வழக்குகளும் இதே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இந்த வழக்கில் ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘பல மதப்பிரிவினர் கொண்ட நம் நாட்டில் பல்வேறு திருமணம் மற்றும் சொத்து உரிமை சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. இவை நாட்டின் ஒற்றுமையை அவமதிப்பதாக உள்ளன. பொது சிவில் சட்டமே நாட்டின் ஒற்றுமைக்கு வழிகோலும். இந்த விஷயம் மிகவும் சிக்கலானது. மத நம்பிக்கைகள் சம்பந்தப்பட்டதும் கூட. பொது சிவில் சட்டம் தொடர்பாக சட்ட ஆணையம் குழு ஆராய்ந்து வருகிறது. இதில் சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை செய்து, பொது சிவில் சட்டம் உருவாக்குவது குறித்து ஆய்வு செய்யப்படும்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: