என்கவுன்டரில் ரவுடிகள் சுட்டுக்கொலை ஏன்? வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் விளக்கம்

சென்னை: வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: செங்கல்பட்டில் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் செங்கல்பட்டு கே.கே. தெரு மற்றும் மேட்டு தெருவை சேர்ந்த பிரபல ரவுடிகளான கார்த்திக் (எ) அப்பு (32), மகேஷ் (22) நேற்று முன்தினம் மாலை கொலை செய்யப்பட்டனர். குற்றவாளிகளை கைது செய்ய 3 இன்ஸ்பெக்டர்கள், 2 எஸ்ஐ தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றபள்ளி மலை பகுதியில் குற்றவாளிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே, திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் ஏட்டுக்கள் சுரேஷ்குமார், பரத்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர், குற்றவாளிகளை பிடிக்க முயன்றபோது, அவர்கள் போலீசாரை கத்தியால் வெட்டினர். இதில் 2 ஏட்டுகளுக்கு தோள்பட்ைடயில் படுகாயம் ஏற்பட்டது. மேலும், நாட்டு வெடிகுண்டுகளையும் வீசினர். இதில் தங்களை தற்காத்துக்கொள்ள இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் 4 முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் 2 பேர் இறந்தனர். மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், முக்கிய குற்றவாளியான அசோக் என்பவரது மனைவி ஜெர்சிகா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலையில் தொடர்புடையவர்கள் பற்றி போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். இவர்களுக்கு நாட்டு வெடிகுண்டு எப்படி கிடைத்தது,  யார் யார் சப்ளை செய்கிறார்கள்  என பல கோணங்களில்  விசாரிக்கின்றனர். கடந்த 2018ல் நடந்த காதல் தொடர்பான மோதலில், இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

அந்த வழக்கை வாபஸ் பெறும்படி கார்த்திக், மகேஷிடம்  மொய்தீன், தினேஷ் ஆகியோர் கூறியுள்ளனர். ஆனால், கார்த்திக், மகேஷ் மறுத்துள்ளனர். அதனால், இருவரையும் மொய்தீன், தினேஷ் ஆகியோர் தீர்த்து கட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 5 நாட்டு வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொலை, கொள்ளையை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, குற்றவாளிகள் கைது, குண்டர் தடுப்பு சட்டம், ஆர்டிஓ விசாரணைக்கு உட்படுத்துவது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. தீவிர ரோந்து பணியும் நடக்கிறது. இவ்வாறு ஐ.ஜி சந்தோஷ் குமார் கூறினார்.

Related Stories: