ஒமிக்ரான் ரொம்ப மோசமானது அசால்ட்டா இருக்காதீங்க... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

புதுடெல்லி: ‘ஒமிக்ரான் வைரஸ் மிகவும் மிதமானது என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். அது, உலகளவில் மக்களை கொன்று வருகிறது,’ என்று உலக சுகாதார அமைப்பு கடுமையாக எச்சரித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 1.17 லட்சம் பேர் பாதித்துள்ளனர். தென் ஆப்ரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் இறுதியில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ், உலக நாடுகளை தற்போது அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. ‘இது, மிகவும் சாதுவானது; பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது,’ என்று ஒருபுறம் சில நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

மறுபுறம், ‘மிகவும் ஆபத்தானது,’ என்று மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர். இதனால், ‘உண்மையிலேயே... ஒமிக்ரான் ஆபத்தானதா? இல்லையா?’ என்ற குழப்பம், மக்களிடையே ஏற்பட்டுள்ளது. அதே நேரம், உலகளவில் இது மிகவும் அதிவேகமாக பரவும் என்ற எச்சரிக்கை தற்போது உண்மையாகி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த வாரம் வரையில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருந்த டெல்டா, ஒமிக்ரான் வைரஸ்களின் தினசரி பாதிப்பு, நேற்று ஒரு லட்சத்தை கடந்து விட்டது. இதன்மூலம், நாடு முழுவதும் 3வது அலையின் சீற்றம் அதிகமாகி வருவது உறுதியாகி இருக்கிறது.

 நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 நேர பாதிப்புகள் தொடர்பாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. இது, கடந்த 214 நாட்களில் இல்லாத வகையில் மிகப்பெரிய எண்ணிக்கையாகும்.

* இதன்மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 52 லட்சத்து 26 ஆயிரத்து 386 ஆக அதிகரித்துள்ளது.

* மேலும், புதிதாக 302 பேர் பலியாகி உள்ளனர். இதன்மூலம், நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 83 ஆயிரத்து 178 ஆக உயர்ந்துள்ளது. இதில், அதிகபட்சமாக கேரளாவில் 221 பேர் இறந்துள்ளனர்.

* நாடு முழுவதும் தற்போது 3 லட்சத்து 71 ஆயிரத்து 363 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் அதனம் ஜேப்ரிசியஸ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘உலகளவில் டெல்டா வைரசை விட ஒமிக்ரான் மிக வேகமாக, சுனாமியை போல் பரவி வருகிறது. 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு டெல்டா வைரசை விட இது குறைந்த பாதிப்புகளை மட்டுமே ஏற்படுத்துகிறது. அதற்காக, இது, மிதமான பாதிப்புகளை கொண்டது என்று அலட்சியமாக கருதி விட வேண்டாம். இதனால் பாதிக்கப்படுவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறக்கின்றனர். கடந்த வாரம் வரையில் இந்த வைரசால் உலகளவில் ஒரு கோடி பேர் பாதித்துள்ளனர். இது, அதற்கு முந்தையை வாரத்தை விட 71 சதவீதம் அதிகமாகும்,’’ என்றார்.

150 கோடி டோஸ்பிரமதர் மோடி பெருமிதம்

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் மருத்துவமனையில் 2வது பிரிவை  காணொலி மூலமாக பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்து  பேசியதாவது:

நமது நாடு 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் மிகப்பெரிய சாதனையுடன் 2022ம் ஆண்டை தொடங்கி இருக்கிறது. கடந்த 5 நாட்களில்  நாடு முழுவதும் 1.5 கோடி சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மேலும், தகுதியான நபர்களில் 90 சதவீதம் பேருக்கு  முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 150 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது 130 கோடி இந்திய மக்களின் திறமை,  தன்னம்பிக்கை, சுயசார்பின் அடையாளமாக திகழ்கிறது. ஏழைகள், பணக்காரர்கள் என்ற பாகுபாடு இல்லாமல், எல்லா தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பான எதிர்காலத்தை அளிப்பதற்கான மருத்துவ வசதிகள், அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ஒன்றிய அரசு ஒய்வின்றி திட்டமிட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

உலக சுகாதார அமைப்பு அனுமதி தரவில்லையா?

ஒன்றிய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் கோவாக்சின் தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு உலக சுகாதார அமைப்பு இன்னும் அனுமதி அளிக்கவில்லை என்றும், அதற்கு முன்பாகவே இந்தியாவில் இது பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல் தவறானது. மக்களை தவறாக வழி நடத்தக்கூடியது,’ என்று கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயணிகளுக்கு 7 நாட்கள் கட்டாய தனிமை

உலகளவில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால்,  இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு  கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகள் அனைவரும், 7 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டும். 8 நாள் அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.

ஒமிக்ரான் பாதிப்பு 3007 ஆக உயர்ந்தது

நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3007 ஆக உயர்ந்துள்ளது. அதிக பாதிப்புகள் உள்ள  மாநிலங்கள் வருமாறு:

மகாராஷ்டிரா    879

டெல்லி        465

கர்நாடகா        333

ராஜஸ்தான்     291

கேரளா        284

குஜராத்        204

இந்தியாவில் கொரோனா அலை தொடங்கியதில் இருந்து நேற்று வரையில் மொத்தம் 4 லட்சத்து 83 ஆயிரத்து 178 பேர் இறந்துள்ளனர். இதில், அதிக பேர் இறந்த மாநிலங்களின் விவரம் வருமாறு:

 மாநிலங்கள்    பலி

மகாராஷ்டிரா    1,41,594

கேரளா        49,116

கர்நாடகா        38,358

தமிழ்நாடு        36,825

டெல்லி        25,127

உத்தர பிரதேசம்    22,917

மேற்கு வங்கம்    19,846

Related Stories: