பவானி சாகர், அந்தியூர் அருகே காட்டு யானைகள் அட்டகாசம் வயல், வாழைத் தோட்டம் நாசம்

சத்தியமங்கலம் : பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த யானைகள் இரவில் வனத்தைவிட்டு வெளியேறி அருகே உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 யானைகள் காராச்சிக்கொரை கிராமத்திலுள்ள விவசாயி சித்ரா என்பவரது தோட்டத்திற்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின.

யானைகள் வாழை மரங்களை சேதப்படுத்துவதைக் கண்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

இருப்பினும் காட்டு யானைகள் 200க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்தின. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் யானைகள் இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தியதால் சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறாமல் தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்தியூர்:அந்தியூர் வனச்சரகம் அருகேயுள்ள தோணிமடுவு, வட்டக்காடு, வரட்டுப்பள்ளம் ஆகிய இடங்களில் உள்ள விவசாயிகள், நெல், வாழை, கரும்பு, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு வட்டக்காடு பகுதியைச் சேர்ந்த  மயில்சாமி என்பவரது தோட்டத்தில்  ஒற்றை யானை புகுந்துள்ளது. அவர் பயிரிட்டு இருந்த நெற்பயிர்களை சாப்பிட்டும் காலால் மிதித்தும் சேதப்படுத்தியது.

இது மட்டுமன்றி, கிழங்குகுழி அருகே உள்ள சூரி என்பவரது தோட்டத்தில் புகுந்த யானை, அங்கிருந்த கரும்பு பயிர்களை நாசம் செய்தது. இது சம்பந்தமாக அந்தியூர் வனத்துறையினருக்கு சம்பந்தப்பட்ட விவசாயிகள் தகவல் தெரிவித்தனர்.மேலும் வனப்பகுதியோரம் உள்ள விவசாய நிலங்களில் யானைகளின் நடமாட்டத்தை தடுக்க வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: