நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பஸ் நிறுத்தும் இடத்தில் முனைகளை வளைவாக்கும் பணி மும்முரம்

நெல்லை:  நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பஸ் டயர்களை பாதுகாக்க வேண்டி அதை நிறுத்தும் செவ்வக வடிவ இடத்தின் முனைகளில் உள்ள இரும்பை வெட்டி எடுத்துவிட்டு அப்பகுதியை வளைவாக்கும் பணி நடந்து வருகிறது. நெல்லை வேய்ந்தான்குளம் புதிய பஸ் நிலையம் சமீபத்தில் புதுப்ெபாலிவுடன் கட்டி முடிக்கப்பட்டு தமிழக முதல்வரால் காணொலிக்காட்சி மூலமாக திறந்து வைக்கப்பட்டது. புதிய பஸ் நிலையத்தில் மொத்தம் 6 நடைமேடைகள் உள்ளன. ஒவ்வொரு நடைமேடையிலும் 13 பஸ் நிறுத்தும் இடங்கள் வீதம் மொத்தம் 78 பஸ்களை நிறுத்துவதற்கான பஸ் கவுன்டர்கள் உள்ளது. பஸ் நிலையத்தில் இருந்து நெல்லை மாநகர், மாவட்டம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கும் தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த பஸ் நிலையத்தில் பஸ்களை நிறுத்தும் கவுன்டர்களின் முனைகளில் உள்ள இரும்புக் கம்பியை வெட்டி எடுத்து அதை வளைவாக மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த பணிகள் குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பஸ் நிலையத்தில் உள்ள செவ்வக வடிவிலான பஸ் கவுன்டர்களைச் சுற்றிலும் இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டு இருந்தது. இக்கவுன்டர்களின் உள்ளே பஸ்களை நிறுத்தும்போதும், வெளியே எடுக்கும்போதும் அதன் கூரான முனைப்பகுதிகளில் உரசி சில பஸ்களின் டயர்கள் சேதமடைந்தன. இதனால் பஸ் டயர்களை பாதுகாக்க வேண்டி, கூரான அந்த முனைப்பகுதியில் ஒன்றரை அடி அளவில் இரும்புக்கம்பிகளை வெட்டி எடுத்துவிட்டு அப்பகுதியில் சிமென்ட் பூசி வளைவாக மாற்றி அமைக்கும் பணி மாநகராட்சி மூலம் கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார். 

Related Stories: