கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக 5 ஏடிஎம் மையங்கள்: சிஎம்டிஏ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து திருச்சி, சேலம், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயங்கி வருகிறது. இதில், பல்லாயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்து செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பேருந்து பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்திற்குள் 5 ஏடிஎம் வைப்பதற்காக இடவசதி ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் ஒரே ஒரு ஏடிஎம் மட்டும் வைக்கப்பட்டிருந்தது. மேலும், இந்தியன் வங்கி சார்பில் வைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரம் சரிவர இயங்கவில்லை.எனவே, பேருந்து பயணிகள் மணி கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டிருந்தது. இதனால், குறித்த நேரத்திற்கு சென்று பேருந்துகளில் ஏற முடியாமல் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து தினகரனின் நாளிதழில் கடந்த 19ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், 5 இடங்களில் ஏடிஎம் அமைக்கப்படும் என்று சிஎம்டிஏ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிஎம்டிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் 2 இடங்களில் மொத்தம் 10 ஏடிஎம் மையங்கள் அமைக்க ஏற்கனவே சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தால் அனுமதி வழங்கப்பட்டு, அதன் முதற்கட்டமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹிட்டாச்சி ஆகியவை மூலம் ஏடிஎம் மையங்கள் அமைக்க ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. அவற்றுள் தற்போது, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகிய 2 வங்கிகளின் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இதுதவிர, நடமாடும் ஏடிஎம் வாகன இயந்திரம் ஒன்று பேருந்து வளாகத்தில் பயணிகளின் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. இந்நிலையில், கனரா வங்கி ஏடிஎம் மையம் வரும் 24ம் தேதிக்குள்ளும், ஹிட்டாச்சி நிறுவன ஏடிஎம் 25ம் தேதிக்குள்ளும், ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் 29ம் தேதிக்குள்ளும் செயல்பாட்டிற்கு கொண்டுவர அந்த வங்கிகள் உறுதி அளித்துள்ளனர். எனவே, இந்த மாத இறுதிக்குள் 5 ஏடிஎம் மையங்களும் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக 5 ஏடிஎம் மையங்கள்: சிஎம்டிஏ நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: